
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிப்பில் இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, கிங்ஸ்லி என்று பலர் நடித்திருக்கின்றனர்.
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 19 இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப்.9) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, “சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர் கௌதமன்.
அதுமட்டுமின்றி அவர் சமரசம் இல்லாத ஒரு போராளி. ஒரு படத்திற்கான வெற்றியானது விழாக்களாலும், பத்திரிகையாளர் சந்திப்புகளாலும் தீர்மானிக்கப்படுவதில்லை.
இன்று திரைப்பட உலகத்தினுடைய நோக்கும், போக்கும் துன்பத்தில் இருப்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
‘படையாண்ட மாவீரா’ படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. அதற்கு முன்னாள் நிகழ்காலப் படங்கள் பலவற்றின் பலவீனங்களைச் சொல்லப்போகிறேன்.
நம்மிடையே மிகப்பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். மிகப்பெரிய ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆசியாவிலேயே சிறந்த திரையரங்குகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
இவ்வளவு இருந்தும் 200 படங்களில் ஏன் 10 படங்கள் மட்டுமே வெற்றியை நோக்கிச் செல்கின்றன. மீதி 190 படங்கள் ஏன் ஓடவில்லை என்று சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல், பிற படங்களைப் பார்த்து படம் எடுக்கிறார்கள்.

வாழ்க்கையோடு சம்பந்தம் இல்லாமல் போனதால்தான் சில படங்கள் அந்நியப்பட்டுப் போய்விட்டன என்று நான் நினைக்கிறேன். தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, தொழில்நுட்பத்தாலேயே அழிகிறது என்று நான் நினைக்கிறேன்.
கதையாசிரியர் என்ற ஜாதியைக் கொன்றது யார்? திரைக்கதை, வசனகர்த்தா ஆகியோரை வழித்தெடுத்தது யார்? மேலும் வெற்றிகண்ட சினிமா தோல்வி அடைவதற்குக் காரணம் தமிழர்கள் திரையரங்கிற்குச் சென்று படங்கள் பார்ப்பது குறைந்திருக்கிறது” என்று வைரமுத்து ஆதங்கப்பட்டுப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…