
சமூக ஊடகத் தடை:
Gen Z போராட்டம் – நேபாளத்தில் Gen Z (இளைஞர் தலைமுறை) தலைமையில் நடந்த போராட்டங்கள், கடும் எதிர்ப்புக்குப் பிறகு, சமூக ஊடக தளங்களுக்கு விதித்த தடையை நேபாள அரசு நீக்கியுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் நேபாளத்தின் புதிய சட்ட விதிகளின் கீழ் பதிவு செய்ய தவறியதாகக் கூறப்படுகிறது. அதனால் கடந்த வாரம் பல சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது.
இந்தத் தளங்கள் மூலம் வெறுப்புப் பேச்சுகள், போலிச் செய்திகள், மோசடி மற்றும் பிற குற்றங்கள் பரப்பப்படுவதாக நேபாள அரசு குற்றம் சாட்டியுள்ளது.
நேபாள் பிரதமர் விளக்கம்:
இது தொடர்பாக பேசிய நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, “தடை செய்யப்பட்ட சமூக ஊடக தளங்களில் ஒன்றான X, நேபாளத்தின் இறையாண்மையை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டது.
நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக நம் அரசின் விதிகளுக்கீழ் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் எனச் சொல்லி வருகிறோம். சட்டங்களை மதிக்கவும், பதிவு செய்யவும் கேட்டோம்.
அவர்கள் அதை புறக்கணித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது நமது தேசிய இறையாண்மையைக் காக்கும் விஷயம்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அரசு வெளியிட்ட அறிவிப்பில், பதிவு செய்யாத சமூக ஊடகங்களை செயலிழக்கச் செய்ய தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது.
உள்ளூர் ஊடகங்களின்படி, தடை செய்யப்பட்ட தளங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப், டிக்டாக், டென்சென்ட், ஸ்னாப்சாட், பின்டெரெஸ்ட் மற்றும் X ஆகியவை அடங்கும்.
இதற்கு முன்னதாக, கடந்த ஜூலையில் ஆன்லைன் மோசடி மற்றும் பணமோசடி அதிகரித்ததால், டெலிகிராம் செயலிக்கு நேபாளம் தடை விதித்திருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், டிக்டாக் நேபாளத்தின் விதிகளுக்கு இணங்க ஒப்புக்கொண்டதால், ஒன்பது மாத தடையை நேபாள அரசு நீக்கியது.
ஊழல் எதிர்ப்பு மனநிலை:
நேபாள மக்களிடம், நேபால் அரசும் பெரும் ஊழலில் ஈடுபடுவதாக கருத்து நிலவுகிறது. பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் அரசு, ஊழலைத் தடுக்கத் தவறிவிட்டதாக கண்டனங்கள் எழுந்தன.
எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பல ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தத் தடைக்குப் பிறகு, இளைஞர்கள் மத்தியில் ஏற்கனவே இருந்த ஊழல் எதிர்ப்பு உணர்வு வலுப்பெற்றது. செப்டம்பர் 8, 2025, திங்கட்கிழமை அன்று தலைநகர் காத்மாண்டுவில் போராட்டம் தொடங்கியது.
அரசியல்வாதிகளின் குழந்தைகள் ஆடம்பரப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த விடுமுறைப் பயண வீடியோக்களை டிக்டாக்கில் வைரலாகின. (டிக்டாக் தடை செய்யப்பட்ட தளங்களின் பட்டியலில் இல்லை).
வெடித்தப் போராட்டம்:
ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காத்மாண்டுவின் மைதிகர் மண்டலா பகுதியில் கூடி, “ஊழலை தடைச் செய்யுங்கள், சமூக ஊடகங்களை அல்ல” போன்ற முழக்கங்களை எழுப்பியபடி நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். காவல்துறை தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்களைக் கலைக்க, காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகள், தண்ணீர்பீரங்கி, தடியடி மற்றும் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியது.
வன்முறை அதிகரித்ததால், நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், ராணுவமும் குவிக்கப்பட்டது. இந்த வன்முறைகளில் 19 பேர் உயிரிழந்தனர்.
அதே நேரம், நேபாள தகவல் தொடர்பு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார்.
அதற்குப் பிறகு, “இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டதால், Gen Z-யின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, சமூக ஊடகங்களுக்கான தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது” என தெரிவித்தார்.
மேலும், “இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க, அமைச்சரவை ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அந்தக் குழுவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.
ஐ.நா கோரிக்கை:
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலக செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்டசானி, “நேபாளத்தில் இன்று போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
இது தொடர்பாக விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.