
நேற்று பிரேசில் அதிபர் லுலா டா சில்வா பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களை ஒன்றுசேர்த்து ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சார்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டிருந்தார். இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது,
“உலக அளவில், ஒட்டுமொத்த வர்த்தக மற்றும் முதலீட்டுச் சூழல் நிலையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று நாடுகள் விரும்புகின்றன.
அதே சமயம், பொருளாதார நடைமுறைகள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டியதும் அவசியம்.
உலக வர்த்தகம் நிலையான முறையில் வளர்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் கூட்டுறவு அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.
தடைகளை அதிகரிப்பதும், வர்த்தக பரிவர்த்தனைகளை சிக்கலாக்குவதும் உதவாது. வர்த்தக நடவடிக்கைகளை, வர்த்தகம் சாராத பிற விஷயங்களுடன் இணைப்பதும் நன்மை பயக்காது.
ஒரே நேரத்தில் பல இடையூறுகள் ஏற்படும்போது, இது போன்ற அதிர்ச்சிகளிலிருந்து விடுபடக்கூடிய வகையில் நமது இலக்கு இருக்க வேண்டும்.
உற்பத்திகளைப் பரவலாக்குவது, பல்வேறு பகுதிகளில் அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் முக்கியமானது ஆகும். இது பிராந்திய தன்னிறைவுக்கும், நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் உதவும்.

பிரிக்ஸ் நாடுகள் தங்களுடைய உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து ஒரு சிறந்த முன்மாதிரியை உருவாக்க முடியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, எங்கள் மிகப்பெரிய பற்றாக்குறைகளில் சில பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் உள்ளன. மேலும் விரைவான தீர்வுகளுக்காக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இன்றைய கூட்டத்தில் இருந்து இந்த புரிதல் ஒரு முக்கிய முடிவாக இருக்கும் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
ஜின்பிங்
ஜின்பிங் பேசும்போது, “நம்முடைய விவகாரங்களை முதலில் நாமே நன்றாக நிர்வகித்தால் மட்டுமே, நம்மால் வெளிப்புற சவால்களை மிகவும் திறம்பட சமாளிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

லுலா
இந்தக் கூட்டத்தில் லுலா, “வரி பிளாக்மெயில் என்பது சந்தையை வெல்வதற்கும், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கும் ஒரு கருவியாக இயல்பாக்கப்படுகிறது” என்று கருத்து தெரிவித்தார்.