• September 9, 2025
  • NewsEditor
  • 0

என் குழந்தை சரியாவே சாப்பிடுறதில்லை; ரொம்ப அடம் பண்ணுது’ என்பதே இன்று பல பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும், குழந்தைகள் மகிழ்ச்சியாகச் சாப்பிடவும் எளிமையான வழிமுறைகளைக் கூறுகிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

Parenting

முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக பலரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த மகிழ்ச்சியான சூழலில், ஒரு தட்டில் உருட்டி வைத்த சாப்பாட்டு உருண்டைகளை தாங்களே எடுத்துச் சாப்பிட, குழந்தைகளைப் பழக்கப்படுத்தியிருப்பார்கள்.

இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இன்றைய நியூக்ளியர் குடும்ப சூழலில், கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் பெரும்பாலும் தனித்தனியேதான் சாப்பிடுகின்றனர்.

இதனால் கூட, சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் குறையலாம். எனவே, குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒன்றரை முதல் இரண்டு வயது வரை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டும். பிறகு அவர்களாகவே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும்.

அப்போது குழந்தைகள் அடம் பிடித்தால், நான்கைந்து வாய் ஊட்டிவிடலாமே தவிர, முழுமையாக நாமே ஊட்டிவிடக் கூடாது.

அப்போதுதான் குழந்தைகள் தங்கள் பசிக்குப் பிறரை எதிர்பார்க்காமல் தாங்களே சாப்பிடுவார்கள்.

Parenting
Parenting

குழந்தைக்கு மணிக்கணக்கில் சாப்பாடு ஊட்டிவிடுவது தவறு. ‘ஒழுங்கா சாப்பிட்டா சாக்லேட் தர்றேன், செல்போன் தர்றேன்’ எனச் சொல்வதும் தவறு.

சாப்பாட்டு விஷயத்தில் அதிகச் செல்லம் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால்தான் குழந்தைகள் மேற்கொண்டு சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள்.

குழந்தைகள் தங்கள் பசிக்கு ஏற்ப சாப்பிடட்டும். சாப்பிடாமல் அடம் பிடித்தால், அமைதியாக அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள்.

பசி எடுத்தால் தானாகச் சாப்பிட வருவார்கள். ‘அடம் பிடிப்பது பயன் தராது’ என்ற எண்ணம் குழந்தைகளின் மனதில் நன்கு பதிய வேண்டும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி எதையாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. கேட்ஜெட்டுகளில் விளையாடுவதை ஊக்கப்படுத்தாமல், குழந்தைகளை ஓடி ஆடி விளையாடவிட வேண்டும்.

அதனால் இயல்பாகவே அவர்களுக்கு பசி எடுத்துவிடும்.

 Salad
Salad

ஆரோக்கியமான உணவு, பழங்கள் என எதுவானாலும் முதலில் அதைச் சாப்பிட்டுத் துப்பினாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ, உடனே ‘இது குழந்தைக்குப் பிடிக்காது/சேராது’ என்று நினைக்கக் கூடாது.

அது அன்றைய சூழல் மட்டுமே. அடுத்த நாள் பழத்தை ஜூஸ் அல்லது சாலட் என மாற்று வழிகளில் கொடுத்து சாப்பிடப் பழக்க வேண்டும்.

குழந்தைகள் எப்போதும் புதுமையையும், வண்ணமயமான விஷயங்களையும் அதிகம் விரும்புவார்கள். எனவே தினமும் வழக்கமான முறையில் இட்லி செய்வதைத் தவிர்த்து, மாற்று வடிவங்களில் செய்து கொடுக்கலாம்.

A, B, C, D வடிவங்களில் தோசை செய்து கொடுக்கலாம். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளின் இயற்கைச் சாற்றை உணவுகளில் சேர்த்து வண்ணமயமாக்கி கொடுக்கலாம்.

parenting
parenting

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரம்தான் குழந்தைகளுக்கு அதிகமாக பசி இருக்கும். அப்போது பெரும்பாலான பெற்றோர் காபி, டீ, பிஸ்கட், பிரெட் என்று கொடுப்பார்கள். இது தவறு.

அப்போது சாதம், பொரியல் அல்லது டிபன் வகைகள் போன்ற ஹெவி உணவுகளை கொடுக்க வேண்டும். பிறகு சில மணி நேரம் கழித்து பால், டீ அல்லது காபி கொடுக்கலாம்.

பெரியவர்கள் எதிர்பார்க்கும் அளவு சாப்பாட்டை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையான அளவே சாப்பிடுவார்கள்.

‘போதும், மம்மி’ என்றால் விட்டுவிடலாம். மீண்டும் பசித்தால் தானாகவே வந்து சாப்பிடப் பழக்கவும்.

மாறாக, ‘முழுசா சாப்பிட்டுத்தான் ஆகணும்’ எனத் திட்டுவது, அடிப்பது, மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடுவது போன்ற செயல்களால் குழந்தைகளுக்கு சாப்பாட்டின் மீது வெறுப்புதான் வரும்” என்கிறார் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *