
“பொருநை” எனப்படும் தாமிரபரணி நதிக்கரை நாகரிகம், உலகின் தொன்மையான நாகரிகம் என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகள் தொடர்ந்து வருகிறது.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என அதன் பெருமைகள் பேசும் இடங்களின் வரிசையில், தற்போது தென்காசி மாவட்டத்தின் கல்லத்திகுளம் கிராமமும் இணைந்துள்ளது. இங்கு நெல்லை மனோன்மணியச் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையினர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலை செயல்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நெல்லை மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் கல்லத்திக்குளம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் ‘பரம்பு’ என்ற மேட்டுநிலத்தில், பழங்காலப் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையை தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளனர்.
தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சுதாகர், உதவிப் பேராசிரியர்கள் மதிவாணன், முருகன் ஆகியோர் தலைமையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கல்லத்திக்குளம் கிராமத்திற்குச் சென்றனர். அங்குள்ள பரம்புப் பகுதியின் மேற்பரப்பில் ஆய்வு நடத்தினர்.

இரும்பு உருக்கிய பின்னர் வெளியேற்றப்படும் கழிவுகளான ‘இரும்புக் கசடுகள்’ பரவலாகக் கிடந்தன. மேலும், உருக்கிய இரும்பை கழிவுகளாகவும் பிற பொருட்களாகவும் வார்த்து எடுக்கப் பயன்படுத்தப்பட்ட சுட்ட மண்ணாலான குழாய்களின் உடைந்த பகுதிகளும் கண்டெடுக்கப்பட்டன.
கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கசடுகள், மண் குழாய்களின் அடர்த்தியை வைத்து இங்கு இரும்பு உருக்காலை இயங்கி வந்தது உறுதி செய்யப்பட்டது.
பிற தொல்லியல் தடயங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, இந்த இரும்பு உருக்காலையின் காலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது சங்ககாலத்தின் இறுதிக்கட்டத்தையோ அல்லது அதற்கு பிற்பட்ட காலத்தையோ சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து பேசிய தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சுதாகர், “வகுப்பறைக் கல்வியுடன் நின்றுவிடாமல் நமது மண்ணின் வரலாறையும் பண்பாட்டையும் ஆவணப்படுத்துவதே இத்துறையின் நோக்கம்.
இந்த ஆய்வில் மாணவர்களை ஈடுபடுத்தியதன் காரணம், அவர்கள் கள ஆய்வுப் பயிற்சி பெற வேண்டும் என்பதுதான். தற்போது கிடைத்துள்ள தொல்பொருட்களை கார்பன் டேட்டிங் போன்ற நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் மூலம், இந்த உருக்காலையின் காலத்தை இன்னும் துல்லியமாக கண்டறிய முடியும்” என்றார்.