
மழை, வெள்ள, புயல் காலம் தொடங்கிவிட்டது. இந்த இயற்கை இடர்பாடுகளால், மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டிய அரசோ, ஒவ்வொரு தடவையும் உயிர் பலி கொண்ட பிறகே… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதற்கொண்டு அனைத்தையும் யோசிக்கவே ஆரம்பிக்கிறது. சமீபத்திய பலி, அப்பாவிப் பெண் தீபா.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த தீபா, மழைநீர் வடிகால் பள்ளத்தின் மீது, ‘பாதுகாப்பு’ என்கிற பெயரில் அதிகாரவர்க்கம் மூடிப்போட்டிருந்த பலகையின் மீது கால் வைத்தார். மழையில் ஊறிப்போயிருந்த அந்த ‘ப்ளைவுட்’ பலகை உடைந்து பள்ளத்தில் விழுந்து இறந்துள்ளார். அரசின் அலட்சியத்தால் பறிக்கப்பட்டுள்ள உயிர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியுள்ளது.
அந்தப் பள்ளத்தை மூடச்சொல்லி, பல மாதங்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஓர் உயிரை பலி கொண்ட பின்னரே, நகரில் திறந்து கிடந்த மழைநீர் வடிகால் பள்ளங்களையெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக மூடும் வேலையை ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில், சென்னை, கண்ணகி நகரில் சாலையில் தேங்கிய மழைநீரில் கால்வைத்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அந்தப் பகுதியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது என ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவை, சென்னை உயிரிழப்புகள் மட்டுமே. பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை என அரசாங்கத்தின் அத்தனை துறைகளின் அலட்சியத்தால், பொறுப்பற்றத்தனத்தால் ஆண்டுதோறும் தமிழகம் முழுக்கவே நடக்கும் இதுபோன்ற மரணங்களுக்கு முடிவுரை எழுதவே முடியவில்லை.
சென்னையில் நான்கரை ஆண்டுகளாக, ரூ.4,000 கோடிக்கு மேல் செலவு செய்து நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள், இன்னும் முழுமையாக முடியவில்லை.
எங்கெங்கு காணினும் சாலையில் பறிக்கப்பட்ட பள்ளங்கள், மூடப்படாத குழிகள், வெளியேற்றப்படாத தண்ணீர் என… ‘உயிர் பலி’ கேட்டுக் காத்திருக்கின்றன.
காக்க வேண்டிய அரசே, காவு வாங்கும் சூழலில், நம் பாதுகாப்பை நாம்தான் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் தோழிகளே.
நடந்து சென்றாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி… சாலைகளில் உள்ள மூடப்படாத சாக்கடைகளில், குழிகளில் கவனம்வைத்து விலகிச் செல்வோம். பள்ளங்கள் மேல் வைக்கப் பட்டிருக்கும் இரும்புத்தட்டு, மரப்பலகை, சிமென்ட் ஸ்லாப் எனத் தற்காலிக மூடிகளை நம்பி ஒருபோதும் காலை வைக்காமல் இருப்போம். மின்சார கசிவு ஆபத்தால், தேங்கிய தண்ணீரில் நடப்பதை தவிர்ப்போம். மழைநீர் ஊறிய பொதுச்சுவர்களின் அருகில் நிற்காதிருப்போம்.
மழைக்காலத்தை மட்டுமல்ல, எக்காலத்தையும் பாதுகாப்புடன் கடப்போம் தோழிகளே!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்