
லக்னோ: உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் மாதோபட்டி, தேசிய அளவில் இடம் பிடித்துள்ளது. கடந்த நூற்றாண்டில், இது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்எஸ் என 50-க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. இதனால் இந்தியாவின் ஐஏஎஸ் தொழிற்சாலை என்ற புனைப் பெயரை மாதோபட்டி பெற்றுத் தந்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, கடந்த 1914-ம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற முகமது முஸ்தபா ஹுசைன், மாதோபட்டி கிராமத்தின் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனையை படைத்தார். இது அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அடுத்தடுத்து பலர் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர்.