
மும்பையில் ஒரு வகை போதைப்பொருள் அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது. மும்பை பார்ட்டிகளில் இந்த போதைப்பொருள் மிகவும் பிரபலம் ஆகும். கடந்த ஆண்டு இப்போதைப்பொருள் மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு மும்பைக்கு சப்ளை செய்யப்பட்டது. ஆனால் அத்தொழிற்சாலைகளுக்கு எதிராக மும்பை போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்ததால் அத்தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. ஆனால் அப்போதைப்பொருளின் தேவை மட்டும் இருந்து கொண்டே இருந்தது. கடந்த மாதம் மும்பையில் பாத்திமா(23) என்ற பங்களாதேஷ் பெண்ணை ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் மும்பை மீரா பயந்தர் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது அப்போதைப்பொருளை தெலங்கானாவில் இருந்து வாங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மும்பையில் இருந்து தனிப்படை போலீஸார் தெலங்கானாவிற்கு சென்றனர்.
அவர்கள் செரமாலி என்ற இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து போதைப்பொருள் தயாரிக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இக்கண்காணிப்புக்கு பிறகு ஒரே நேரத்தில் 60 இடங்களில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் தகவல் தொழில் நுட்பத்தில் நிபுணர் ஆவார். அவர் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் இந்த போதைப்பொருளை தயாரித்து வந்தார்.
ரெய்டு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ரூ.12,000 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு போதைப்பொருள் தயாரிக்க தேவைப்படும் 35 ஆயிரம் லிட்டர் ரசாயானமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது தெலங்கானாவில் தயாரித்து மும்பைக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. கடந்த பல ஆண்டுகளாக இதனை அவர்கள் தயாரித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.