
இங்கிலாந்தின் பிரதமராக கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி பதவியேற்றார் கியர் ஸ்டார்மர். அவரைத் தொடர்ந்து துணை பிரதமராக ஆஞ்சலா ரெய்னர் பதவியேற்றார். ஆட்சி அமைத்து ஒர் ஆண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், துணை பிரதமர் ஆஞ்சலா ரெய்னர் பதவி விலகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து கியர் ஸ்டாமர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
என்ன நடந்தது?
இங்கிலாந்தின் துணைப் பிரதமராக பதவி வகித்து வந்த ஆஞ்சலா ரெய்னர் 40,000 பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புள்ள ஸ்டாம்ப் டியூட்டி வரி விவகாரத்தில் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆஞ்சலா ரெய்னர் அமைச்சரவை நெறிமுறைகளை மீறியுள்ளதாக கண்டறிந்த பிறகு, அவர் துணை பிரதமர் மற்றும் வீட்டு வசதி செயலாளர் பதவிகளிலிருந்து விலகியுள்ளார்.
இவரின் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய துணைப் பிரதமராகவும், நீதித் துறை அமைச்சராகவும் டேவிட் லாம்மி (David Lammy) பொறுப்பேற்றிருக்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் இங்கிலாந்தின் துணை பிரதமர் பதவி வரை உயர்ந்த டேவிட் லாம்மி தொடர்பான செய்திகள் சமூக ஊடங்களில் வைரலாகியிருக்கிறது.
யார் இந்த டேவிட் லாம்மி?
1972-ல் லண்டனில் பிறந்தவர் டேவிட் லாம்மி, சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர். உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பட்டம் பெற்ற இவர், தொடர்ந்து சமூக நீதிக்கான அரசியலை முன்னெடுத்தார்.
அரசியல் பயணம்
டேவிட் லாம்மிக்கு சில கனவுகள் இருந்தது. அதை நிறைவேற்றுவதற்கான களமாக அரசியலையும், ஆயுதமாக கல்வியையும் தேர்வு செய்தார். அதன் தொடராக தன் 27 வது வயதில், 2000-ம் ஆண்டு லண்டனின் டோட்டன்ஹாம் தொகுதியில் தேர்தலை எதிர்க்கொண்டார்.

அவரின் முயற்சிக்கு கரம் கொடுக்கும் விதமாக மக்கள் அவரை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்து அனுப்பினர். அப்போது முதல் 2025-ம் ஆண்டு வரை கடந்த 25 ஆண்டுகளாக அதே தொகுதியில் தொடர்ந்து மக்களின் நம்பிக்கையை தக்கவைத்திருக்கிறார்.
சமூக நீதிக்கான போராட்டம்
லாம்மி ரிவியூ (Lammy Review) எனும் ஆய்வின் மூலம் கருப்பின மக்களுக்கு இங்கிலாந்தின் நீதித்துறையில் ஏற்படும் பாகுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார். இந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியது.
தொடர்ந்து பொதுமக்களின் குரலாக, சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்காக போராடும் குரலாக திகழ்கிறார். குடியேற்ற பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அவர்கள் அனுபவித்த அநீதிக்கு நியாயம் கிடைக்க வெகுவாக பாடுபட்டார்.
கல்வித்துறையில் பங்களிப்பு
“படிக்க விருப்பம் இருப்பவருக்கு ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தி, பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் உதவிகள் கிடைக்க வழிவகுத்தார். குறிப்பாக கல்வி, சமத்துவம், இனச்சமத்துவம் போன்ற விஷயங்களில் அவர் வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசுபவராகவே அறியப்படுகிறார்.