
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன் நேற்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், “கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்.
‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற அடிப்படையில் கட்சியைவிட்டு வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பு என்பது இந்த நேரத்தில் முக்கியம். அதுதான் அதிமுக தொண்டர்களின் விருப்பம். விரைந்து இதைச் செய்ய வேண்டும்.
10 நாள்களில் பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக இறங்கி வெற்றிக்காகப் பணியாற்றுவேன்.
இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி ஆகியாருடன் திண்டுக்கல்லில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைப் பதவி நீக்கம் செய்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. K.A. செங்கோட்டையன், M.L.A., அவர்கள் இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பா இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. தம்பி (எ) K.A சுப்பிரமணியன் அவர்களும், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M.ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி அவர்களும்,
கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. N.D குறிஞ்சிநாதன் அவர்களும் அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. தேவராஜ் அவர்களும் அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.S. ரமேஷ் அவர்களும், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு வேலு (எ) தா. மருதமுத்து அவர்களும்,
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு K.S. மோகன்குமார் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்”.