
பள்ளிக்கூடத்தில் அமீபா என்கிற ஒரு செல் உயிரியைப் பற்றி நாம் எல்லோருமே படித்திருப்போம். அதன்பிறகு உயிரியல் மாணவர்கள் அதைப்பற்றி விளக்கமாகப் படித்திருப்பார்கள். அதற்கு மேல் அமீபா பற்றி நாம் யாருமே யோசித்திருக்க மாட்டோம்.
ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் கேரளாவில் தொடர்கிற ‘மூளை தின்னும் அமீபா’ பற்றிய செய்திகளாகவே இருக்கிறது. சென்ற வருடம் 9 பேர் இந்த அமீபா தொற்று காரணமாக கேரளாவில் மரணமடைந்தார்கள். இந்த வருடம் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இது ‘நிக்லேரியா ஃபவுலேரி’ ( Naegleria fowleri) எனப்படும் அமீபா வகையைச் சேர்ந்தது. மருத்துவர்கள் இதை ‘பிரைமரி அமீபிக் என்செஃபலைட்டிஸ்’ (Primary Amoebic Encephalitis) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். அதனால், இதை ‘மூளை தின்னும் அமீபா’ என்கிறார்கள். இதை ஆஸ்திரேலியாவில் 1965-ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறிந்தார்கள்.
வாழும் இடத்தைப் பொறுத்து, 8 மைக்ரோமீட்டர் முதல் 15 மைக்ரோமீட்டர் வரையான அளவில் இந்த அமீபா காணப்படுகிறது. பொதுவாக இவை வெதுவெதுப்பான நன்னீரில் அல்லது அழுக்கான ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில், குறிப்பாக குறைந்த அளவு நீர் மட்டம் கொண்ட நீர்நிலைகளில் வாழ்கின்றன.
அதுமட்டுமல்லாமல், முறையாக குளோரின் கலந்து கிருமி நீக்கம் செய்யப்படாத நீச்சல் குளங்கள், குழாய்த் தண்ணீர், கிணற்று நீர், வாட்டர் தீம் பார்க் நீர்விளையாட்டு பகுதிகள், ஸ்பா போன்ற இடங்களிலும் வாழக்கூடும்.
சுத்தமற்ற வெதுவெதுப்பான நீர்நிலைகள்தான் ‘மூளைத் தின்னும் அமீபா’ வாழ்வதற்கு ஏற்ற இடம். 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில்கூட இந்த அமீபா உயிர்வாழ முடியும். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குழாய்த் தண்ணீர், நீச்சல் குள நீர் மற்றும் உப்புக் கடல் நீரில் இந்த அமீபா வாழ முடியாது என்று ApolloHospital.com தெரிவிக்கிறது.

மூளைத் தின்னும் அமீபா மனிதர்களுக்குள் எவ்வாறு நுழைகிறது? அது நுழைந்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே பகிர்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா.
இந்த அமீபாக்கள் வாழும் நீர்நிலைகளில் மூழ்கி குளிக்கும்போது, அந்த நீர் மூக்குக்குள் சென்று விடும். அப்படி சென்றுவிட்டால், மூக்கின் உள்ளே உள்ள ‘கிரிப்ரிஃபார்ம் பிளேட்’ (Cribriform Plate) எனப்படும் எலும்பில் இருக்கும் சிறு சிறு ஓட்டைகள் வழியாக, அது மூளை நோக்கி செல்கிறது.
இதன்பிறகு, தீவிரமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, குமட்டல், வாந்தி ஆகியவை ஆரம்பமாகும். அடுத்த பத்து நாள்களுக்குள், மூளை காய்ச்சலின் அறிகுறிகளான பின்கழுத்து இறுக்கம், தலைச்சுற்றல், வலிப்பு, கவனமின்மை, மூர்ச்சை, கோமா, இறப்பு ஆகியவை நிகழ்ந்துவிடும்.

மூளைத் தின்னும் அமீபா தொற்று அரிதானது என்பதாலும், இதன் அறிகுறிகள் ‘பாக்டீரியா’ எனும் மற்றொரு ஒற்றைச் செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சலைப் போன்றே இருப்பதாலும், பிரச்சினைக்குக் காரணம் மூளைத் தின்னும் அமீபாதான் என்பதை கண்டறிவதற்கே தாமதம் ஏற்படலாம்.
இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களைத் தின்று முடிப்பதற்கு முன்பே விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. அதனால்தான் இந்த அமீபா தொற்று ஏற்பட்டால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 100 சதவீதம் என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. இதற்கு சிகிச்சை இருக்கிறதா, பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பதையும் அவர் விளக்கினார்.
“மூளைத் தின்னும் அமீபா தொற்று, பாக்டீரியா தொற்று போலத் தோன்றினாலும், பாக்டீரியா கொல்லிகள் என அழைக்கப்படும் ஆன்டிபயாட்டிக்குகளுக்கு (Antibiotics) அடங்காது. இதற்கு, கோவிட் காலத்தில் ஏற்பட்ட கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு பயன்படுத்திய ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ (Amphotericin B) சிகிச்சை பயனளிக்கிறது.
இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உடனடியாகக் கணித்து, மூளைத் தண்டுவட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து ‘அம்ஃபோட்டெரிசின்-பி’ சிகிச்சையை வழங்கினால், பாதிக்கப்பட்டவர் பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் 47 வயதான ஒரு நபரை இந்த முறையில் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.”

வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பதால், இதுவரை உலகளவில் 500-க்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 50-க்கும் குறைவான நபர்கள் இறந்ததாக மருத்துவ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
என்றாலும், மூளைத் தின்னும் அமீபாவால் இறந்தவர்களை ‘மூளைக்காய்ச்சலால் இறந்தவர்கள்’ எனப் பதிவுசெய்திருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை நமக்குத் தெரியாமல் போகும்.
மற்றபடி, இந்த அமீபா தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது. அசுத்தமான தண்ணீர் குடிப்பதாலும் பரவாது. நீர்நிலைகளிலும், நீச்சல் குளங்களிலும் குளிக்கும் அனைவருக்கும் இந்த அமீபா தொற்று ஏற்படுவதில்லை. மிக அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது; அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் அமைகிறது.
அதனால், இந்த அமீபா குறித்து அச்சம்கொள்வதைவிட, பொது நீர்நிலைகளில் மூழ்கி குளிப்பதைத் தவிர்க்கவும். நீச்சல் குளங்கள் முறையாக குளோரினேட் செய்து கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொண்ட பிறகே அதற்குள் இறங்குங்கள். நீச்சல் பயிற்சி செய்யும் போது nose clip (நோஸ் க்ளிப்) அணிந்துகொள்ளுங்கள்.

ஒருவேளை, இந்த விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னர் பொது நீர்நிலையில் குளித்துவிட்டீர்களென்றால், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ‘பொது நீர்நிலையில் எத்தனை நாள்களுக்கு முன்னால் குளித்தீர்கள்’ என்பதை தெரியப்படுத்துங்கள். உடனடியாக நோயைக் கண்டறிந்துவிடலாம்” என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR