• September 2, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தின் வசந்தவிழா என்பதால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் அத்தப்பூ கோலமிட்டு, ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில சட்டசபையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. சபாநாயகர் ஏ.என்.சம்சீர் ஓணம் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் ஊழியர்களுக்கிடையேயான போட்டி குழு நடனம் நடைபெற்றது. அதன்படி, பாடலுக்கு ஒரு குழுவினர் மேடையில் நடனம் ஆடினர். முன்வரிசையில் நடனமாடிக்கொண்டிருந்த சட்டசபை துணை நூலகர் ஜுனைஸ் அப்துல்லா(46) திடீரென சுருண்டு விழுந்தார். அவர், சாதாரணமாக விழுந்திருக்கலாம் எனக் கருதி சில ஊழியர்கள் தொடர்ந்து நடனமாடினர். ஆனால், அவர் சிறிது நேரம் ஆகியும் அசைவில்லாமல் கிடந்ததை அடுத்து ஊழியர்கள் அவரை தட்டி எழுப்ப முயன்றனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் ஜுனைஸ் அப்துல்லாவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நடனமாடியபோது ஜுனைஸ் அப்துல்லா சுருண்டு விழுந்த காட்சி

ஜுனைஸ் அப்துல்லா நடனமாடியபோது சுருண்டுவிழுந்து மரணமடையும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தன. வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியைச் சேர்ந்த  ஜுனைஸ் அப்துல்லா இதயம் சம்பந்தப்பட்ட நோய்க்காக கடந்த ஒரு மாதமாக மருந்து எடுத்து வந்துள்ளார். திருவனந்தபுரம் பி.எம்.ஜி ஜங்சன் அருகில் உள்ள அரசு குடியிருப்பில் ஜுனைஸ் அப்துல்லா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ஜுனைஸ் அப்துல்லாவின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சட்டசபை ஊழியர் ஜுனைஸ் அப்துல்லா

ஜுனைஸ் அப்துல்லாவின் உடல் சட்டசபை அலுவலக வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அவருக்கு ரஸீனா என்ற மனைவியும், நஜாத் அப்துல்லா, நிஹாத் அப்துல்லா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஜுனைஸ் அப்துல்லாவின் மறைவுக்கு சபாநாயகர் ஏ.என்.சம்சீர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஓணம் பண்கை கொண்டாட்டத்தின்போது சட்டசபை ஊழியர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *