
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் ‘பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்’ என வருந்துகிறார்கள் நெல்லை கல்லூரி மாணவிகள்.
திருநெல்வேலி மாவட்டம், ரஹ்மத் நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அதில் 4000 மாணவ, மாணவிகள் பயிலும் நிலையில், கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும், அதனால் 2 கி.மீ தொலைவிலுள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள் மாணவிகள் சிலர்.
நம்மிடம் பேசிய மாணவிகள் சிலர், “2020-ம் ஆண்டு, மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று கல்லூரி வாயிலில் பேருந்து நிறுத்தம் திருநெல்வேலி மாநகராட்சியால் சீர்மிகு நகரத் திட்டத்தின்படி கட்டப்பட்டது. ஆனாலும் பேருந்துகள் சரிவர நின்று செல்வதில்லை.
ஒரு அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இக்கல்லூரியில் நெல்லை மட்டுமின்றி அருகிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
குறிப்பாகப் பயிலும் 80% மாணவ, மாணவிகள் பொதுப் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். இருப்பினும், திருச்செந்தூர், ஆத்தூர், உடன்குடி, காயல்பட்டினம் செல்லும் பேருந்துகள் நிற்காமல் செல்வது பெரும் சிரமமாக உள்ளது. இதனால், கல்லூரியிலிருந்து 2.5 கி.மீ தொலைவிலுள்ள பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
மாநகராட்சியால் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வது ஏன்? நிற்காமல் சென்றால் கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் எப்படிப் பயனடைய முடியும்” எனக் கேள்வி எழுப்பினர்.
இதைப் பற்றி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டல கிளை மேலாளர் பூல்ராஜிடம் விளக்கம் கேட்டோம். அவர், “நகர்ப் பகுதியில் அடுத்தடுத்து பேருந்து நிறுத்தங்கள் இருப்பதால் கல்லூரி நிறுத்தத்தில் நிற்காமல் சென்றிருக்கலாம். மாணவர்கள் சார்பில் முன்வைக்கிற கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம். மிக விரைவிலேயே கல்லூரியில் பேருந்து நின்றுசெல்லும்படி நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.
சம்பந்தப்பட்ட கல்லூரி வாசலில் அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க, பேருந்துகள் நிற்கத் தொடங்கியிருக்கின்றன. இது எப்போதும் தொடர வேண்டும் என்பதே மாணவ, மாணவிகளின் கோரிக்கை. மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ள சூழலில், திட்டம் மக்களை எந்தளவுக்குச் சென்றடைகிறது என்ற கண்காணிப்பும் அவசியம்.