
அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், வழக்கறிஞருமான ஜேக் சலிவன், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுடனான தனது குடும்பத்தின் வணிக நன்மைக்காக இந்தியாவுடனான உறவை தூக்கி எறிகிறார் என்று விமர்சித்துள்ளார்.
ஜோ பைடன் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஜேக் சலிவன், இந்தியாவுடனான உறவை தியாகம் செய்வது, அமெரிக்கா சொந்த செலவில் சூனியம் செய்வதைப் போன்றது எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா இந்தியா மீது அதிகப்படியான வரி விதித்துள்ளது, இந்தியா–பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவருவது, ட்ரம்ப் குடும்பத்தின் பாகிஸ்தானுடனான வணிகம் ஆகியவற்றைப் பற்றி சமீபத்தில் அளித்த யூடியூப் சேனல் பேட்டியில் ஜேக் பேசியுள்ளார்.
அமெரிக்கா தனக்குத்தானே செய்துகொண்ட தீங்கு
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா உடன் நல்லுறவைக் கட்டியெழுப்ப அமெரிக்காவின் இரண்டு கட்சி ஆட்சியிலும் உழைத்திருக்கிறோம் என்ற ஜேக்,
“இந்தியாவுடன் தொழில்நுட்பம், திறமை, பொருளாதாரம் மற்றும் பல விஷயங்களில் நாம் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டும். முக்கியமாக சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும்.

ஆனால் இப்போது டிரம்ப் குடும்பத்துடன் வணிக ஒப்பந்தங்களைச் செய்ய பாகிஸ்தான் விருப்பம் கொண்டிருப்பதால் அவர் இந்தியா உடனான உறவுகளைத் தூக்கி எறிகிறார் என நினைக்கிறேன்.
இது அமெரிக்கா தனக்குத்தானே செய்துகொண்ட மிகப் பெரிய ராஜாந்திர தீங்கு. ஏனென்றால் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு நாட்டின் நலன்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.” எனக் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா உடனான உறவை ட்ரம்ப் உதாசினப்படுத்துவது, கனடா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் நட்பில் சந்தேகம் கொள்ள தூண்டியிருப்பதாகவும், ‘அமெரிக்காவுக்கு எதிராகவும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்ற கருத்தை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் ட்ரம்ப் வணிகம்?
அமெரிக்காவின் வோர்ல்ட் லிபர்டி (WFL) நிறுவனம் கடந்த ஏப்ரலில், கிரிப்டோ துறையில் முதலீடுகளை ஊக்குவிக்க பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சில் (பிசிசி) உடன் தொடர்ச்சியாக ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
WFL கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களை வலுப்படுத்த ட்ரம்ப் மற்றும் டீவ் விட்காஃ-ஆள் உருவாக்கப்பட்டது. டிரம்ப் மற்றும் அவரது துணை நிறுவனங்கள் WFL-ன் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன.
2024ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான சந்திப்பின்போது, அமெரிக்க தூதுக்குழுவில் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃபின் மகன், சக்கரி விட்காஃப் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் – பாகிஸ்தான் ராணுவத்தலைவர் அசீம் முனீர் சந்திப்பில், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கிரிப்டோகரன்சி பற்றியும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூலையில் இந்தியா மீது வரி விதிக்கப்போவதாகா மிரட்டிவந்த அதே நேரத்தில் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் ட்ரம்ப். பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதிலும் அமெரிக்கா உதவும் எனக் கூறப்பட்டது.