
சொர்ணாவூர் அணை
கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் பகுதியில் உருவாகும் தென்பெண்ணை ஆறு சுமார் 400 கிலோமீட்டர் பயணித்து கடலூரில் வங்கக் கடலில் கலக்கிறது.
இந்த தென்பெண்ணை ஆற்றின் நீரினை தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம், சாத்தனூர் அணைக்கட்டு, எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு ஆகிய நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ளன.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சொர்ணாவூர் அணையே இந்த ஆற்றின் இறுதியான அணையாக உள்ளது.
இந்த அணைக்கட்டில் இருந்து பங்காரு கால்வாய் வழியாக பாய்ந்து வரும் ஆற்று நீரால் 21 ஏரிகள் நிரம்புகின்றன. நீர்வரத்து மூலம் தமிழக பகுதிகளில் 1,300 ஏக்கர் விளைநிலங்களும், புதுச்சேரி பகுதிகளில் 4,800 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
சொர்ணாவூர் அணைக்கட்டு தமிழ்நாடு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் வளம் சேர்க்கிறது.
சேதமடைந்த அணை
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொர்ணாவூர் அணையை சீரமைத்து வலுப்படுத்த ரூ.39 கோடி நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சீரமைப்பு பணிகளை தொடங்கியது.
பிறகு, 2024 ஆம் ஆண்டு பெஞ்சல் புயலின் போது, அணைக்கட்டின் அதிகபட்ச கொள்ளளவைவிட வினாடிக்கு 62 ஆயிரம் கன அடி நீர் சென்றதால், கொள்ளளவு தாங்காமல் அணை உடைந்தது.
இந்த சேதத்தால், தற்போதைய பருவ மழை காலத்தில் தென்பெண்ணையாறு பெருக்கெடுத்து வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், கடலூர் வழியாக வங்கக் கடலுக்கு சென்று கலந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயன்படுத்தமுடியாமல் கடலுக்கு செல்லும் நீர்
இதுபற்றி அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறியதாவது:
“தமிழக பகுதிகளில் அமைந்துள்ளது சொர்ணாவூர் படுகை அணை. இங்கிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நிலத்தடி நீர் உயர்வு மற்றும் குடிநீர் தேவைக்கு இந்த சொர்ணாவூர் படுகை அணையை பெரிதும் நம்பியுள்ளோம்.
இந்த அணை பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகள் ஒப்பந்தம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டப்பட்ட அணையாகும்.
புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரி பாகூர் ஏரி இதற்கு பங்காரு வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறுகிறது. இதன் நீளம் 14 கிமீ ஆகும். அணை கட்டாததால் ஆற்றுநீர் வாய்க்கால் வழியாக வராமல் கடலுக்கு செல்கிறது.

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மக்கள் பாதிப்பு
பழமையான இந்த படுகை அணை பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் மூலம் செய்ய முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த அணையை பராமரிக்க ரூ.39 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு வேலையை தொடங்கியது.
பிறகு பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. பணிகள் மீண்டும் தொடங்கப்படவில்லை.
சொர்ணாவூர் படுகை அணை சீரமைக்கப்படாததால் சாத்தனூர் அணை மூலம் வரும் தண்ணீர் தற்போது நேரடியாக கடலில் கலக்கிறது. இதனால் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த சொர்ணாவூர் அணைக்கான பராமரிப்புச் செலவுகளை புதுச்சேரி அரசு தமிழ்நாடு அரசுக்கு செலுத்துகிறது.
தமிழ்நாடு அரசு வாய்க்காலை துருவாரி பலப்படுத்தாத காரணத்தால், கடந்தாண்டு வெள்ளத்தில் பங்காரு வாய்க்கால் வழியில் கடுவனூர், குட்டியாங்குப்பம் கரைகள் உடைந்து, கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மழை வரும் முன் அணையை கட்டி கரைகளை பலப்படுத்தினால் மட்டுமே இந்த பருவ மழைக்காலத்தில் மக்களை காக்க முடியும். ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரை பணிகளைத் தொடங்காதது மிகுந்த வேதனையளிக்கிறது.
சொர்ணாவூர் படுகை அணை விஷயத்தில் தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, புதுச்சேரி அரசு இது குறித்து வலியுறுத்த வேண்டும்,” என்றும் தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை விளக்கம்
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் விதிஷ்வரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
“அணையின் மொத்த கொள்ளளவு விநாடிக்கு 1.80 ஆயிரம் கன அடி. ஆனால் புயலின் போது 2.42 ஆயிரம் கன அடி நீர் சென்றதால், அணையின் கொள்ளளவு தாங்காமல் அணை உடைந்தது. எனவே, இந்த புதிய அளவான 2.42 ஆயிரம் கன அடி கொள்ளளவு கொண்ட ஒரு புதுவடிவ அணையை கட்ட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அதற்காக ஆற்றின் நீளம், அகலம், உயரமட்டம் போன்ற அளவுகள் எடுத்து வடிவமைப்பு அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கிறோம். வடிவமைப்பு வந்தவுடன் நிதி மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கிய பிறகு புதிய அணை கட்ட தொடங்கப்படும்,” என தெரிவித்தார்.