• September 2, 2025
  • NewsEditor
  • 0

ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், முதல்வருடன் சந்திப்பு, மதுரையில் மாநாடு அறிவிப்பு என பரபரப்பு கிளப்பி வந்த ஓ.பி.எஸ் இப்போது கொஞ்சம் அமைதியாகியிருக்கிறார்.

ஓ.பி.எஸ் விட்ட இடத்திலிருந்து டிடிவி தினகரன் தொடங்கியிருக்கிறார். NDA கூட்டணி தொடர்பான விவகாரத்தில் பன்னீரைப் போலவே டிடிவியும் நயினாரின் மீது பாய்ந்திருக்கிறார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் என்டிஏ (NDA) கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை நயினார் நாகேந்திரன்தான் சொல்ல வேண்டும் எனப் பேசியுள்ளார் டிடிவி. கூடவே, விஜய் தலைமையில் ஒரு அணி அமையும் என்றும் கொளுத்திப் போட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே இருக்கும் நிலையில், விஜய் தலைமையில் ஒரு அணி அமையும் என டிடிவி தினகரன் பேசியிருப்பது, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டணியில் டிடிவி இருக்கிறாரா?

இந்நிலையில் டிடிவியின் இந்தப் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனிடம் பேசினோம். இதுதொடர்பாக பேசிய அவர், “விஜய்க்கு சாதகமான கருத்தை டிடிவி சொன்னதாக இல்லாமல், சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அரசியலை பொதுப்படையாகப் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். விஜய்க்கு ஒரு ஆதரவு வட்டம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

விஜய் 5 சதவீதம் அல்லது 15 சதவீதம் ஓட்டுகள் வாங்கினாலும் அது மற்றக் கட்சிகளுக்கு பாதிப்பாகத்தான் இருக்கும். அதனால்தான் தினகரன் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி என்டிஏ கூட்டணியில் இருந்தபோதும், கூட்டணியில் இருந்து வெளியே சென்றபோதும், டிடிவி தினகரன் “நாங்கள் என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறோம்” என்று சொல்லி வந்தார்.

அமித்ஷா
அமித்ஷா

வாய் திறக்காத அமித்ஷா

அதனை அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் சில நேரங்களில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், வாயைத் திறக்க வேண்டிய நேரத்தில் அமித்ஷா அதைப்பற்றி எதுவும் கூறவில்லை.

அதேபோல், மேட்டுப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கும்போதும் எல்லோரையும் அழைக்காமல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் இருவரை மட்டுமே அழைத்தார்.

சில சங்கடங்கள் இருக்கலாம். தொடங்கும் போதே தினகரனை அழைத்தால், மற்ற எல்லோரையும் அழைக்க வேண்டிய சூழல் வரும் என்பதால், அவரை அழைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அதன்பிறகு பல சூழல்கள் வந்தபோதும் கூட தினகரனை அவர் அழைக்கவில்லை.

கூட்டணியில் இருக்க வேண்டுமா?

இதற்குமேல், தினகரன் என்டிஏ கூட்டணியில் இருக்க வேண்டுமா என்று நினைத்தால், அது தவறில்லை. ஆனால், அவர் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதே என் எண்ணம்.

வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்ததுதான் அரசியல் என்றாலும், குறைந்தபட்ச நாகரிகம் இருப்பதால் தான் அரசியலை நோக்கி இளைஞர்கள் வருகிறார்கள்.

அந்த இளைஞர்களுக்கு தினகரன் ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டுமெனில், முதலில் அந்த கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும். சுயமரியாதையை இழந்து எந்த அணியிலும், கூட்டணியிலும் நீடிப்பதில் எவருக்கும் பலன் இல்லை. தினகரனும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அப்படியே அவர் கூட்டணியில் இருந்து வெளியே வந்தாலும், அரசியலை விட்டு சென்றுவிட மாட்டார். அவர், அவருக்கான அரசியலை செய்யத்தான் போகிறார்.

2021 தேர்தலில் பாஜக அவரை நம்ப வைத்து கழுத்தறுத்தபோதும் கூட, களத்தை விட்டு வெளியே போகாமல் தனித்துப் போட்டியிட்டு 3 சதவிகித ஓட்டுகளை பெற்றார்.

23 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு அவர் காரணமானார். ஆனால், அவரின் நோக்கம் அது அல்ல. ஆனால், அவரை அந்த சூழ்நிலைக்கு தள்ளியது எடப்பாடியும் பாஜகவும் தான்.

இப்போதும் அந்த இடத்திற்கு தள்ளுவது பாஜகத்தான். பாஜக நினைத்தால் அதிமுகவை பலப்படுத்த முடியும். உருட்டி, மிரட்டி கூட்டணிக்கு அழைத்த அமித்ஷா, அதே உருட்டலையும் மிரட்டலையும் பயன்படுத்தி அதிமுகவை ஒருங்கிணைக்கவும் முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

பிரிந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஓர் அணியுடன் கூட பயணிக்க விரும்பாததே ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணம். அதைப் பற்றி பாஜக கவலையும் கொள்ளவில்லை.

பலவீனப்படுத்த நினைக்கும் பாஜக

அதே நிலைமையே நாளை தினகரனுக்கும். அதிமுக பலவீனப்படுவதே பாஜக எதிர்பார்க்கும் விஷயம்; அதையே அவர்கள் விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் அதிமுக அழியும், அந்த இடத்தில் நாமே அமரலாம் என்று பாஜக நினைக்கிறது.

அதிமுக தொண்டர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். “எனக்கு பிறகும் 100 ஆண்டுகள் இந்தக் கட்சி இருக்கும்” என்று ஜெயலலிதா கூறியதை மதிக்க நினைத்தால், அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்றுதான் அக்கட்சியினர் நினைக்க வேண்டும்.

தங்களது சுயவிருப்பு, வெறுப்புகளை அவர்கள் பார்க்கக் கூடாது. இது தினகரனுக்கும், ஓபிஎஸுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலாவிற்கும் கூட பொருந்தும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஓபிஎஸ், விஜய், தினகரன் அணி

இதை எல்லாம் மறந்து பிடிவாதமாக இருந்தால் வரலாறு இவர்களை மன்னிக்காது. ஒருவேளை தினகரன் வெளியே சென்றால், விஜய்தான் ஆப்ஷனாக இருப்பார்.

ஓபிஎஸ், விஜய், தினகரன் சேர்ந்து அணி அமைக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. அப்படி ஒரு அணி அமைந்தால், விமர்சனங்களை எதிர்கொள்ளாத அணியாக அது இருக்கும். அதிமுகவிற்கு எதிராக நிற்கிறார்கள் என்று சொல்லக்கூடிய தகுதி எடப்பாடிக்கு இருக்காது. ஏனெனில், ஓபிஎஸையும் தினகரனையும் அந்த நிலைக்கு தள்ளியது எடப்பாடியும் பாஜகவும்தான்,” என்று அரசியல் நிலவரத்தை எடுத்துரைத்தார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *