
தேசிய ஜனநாயகக் கூட்டணி
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினர் நாகேந்திரன்,
“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களோடு கூட்டணியில் இருந்துதான் போட்டியிட்டார். இன்று வரையிலும் அவர் எங்களுடன்தான் பயணிக்கிறார். எனவே, அவர் எங்கள் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.
அ.தி.மு.க தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து புதிய கூட்டணியை ஏற்படுத்தியது. டி.டி.வி. தினகரன் எங்களுடன்தான் இருக்கிறார்.
`இந்த முறையும் சும்மாதான் வருவார்’
முதல்வர் ஸ்டாலின், பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பும் அவர் அமெரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளுக்கு சென்று வந்தார்.
அப்போது, அந்தப் பயணங்கள் மூலம் வந்த முதலீடுகள் எவ்வளவு, போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன என்பதைக் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை.
இப்போதும் அவர் வெளிநாடு சென்றிருக்கிறார். வழக்கம் போலவே, இந்த முறையும் அவர் எந்த முதலீட்டையும் கொண்டு வராமல் சும்மாதான் திரும்பி வருவார்.

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்
தமிழகத்தின் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அது குறித்து நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றார்.