
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சீரங்கவுண்டனூரைச் சேர்ந்தவர்கள் ரவி, செல்வநாயகி தம்பதியினர். இவர்களுக்கு, தன்யா, ஓவியா (வயது 7) என்று இரண்டு மகள்கள் இருந்தனர்.
இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர், பைனான்ஸ் தொழில் மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 29-ம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் அவருடைய மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சிறுமி ஓவியா சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வேகத்தடையில் செல்லும் பொழுது குழந்தை ஓவியா தவறி விழுந்து தலையில் அடிபட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஓவியாவின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முடிவெடுத்தனர். இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இதில், கண்கள், சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானம் செய்யப்பட்டது. உயிரிழந்த ஓவியாவின் உடல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சீரங்ககவுண்டனூரில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாணவியின் தந்தை,
“எனது மகள் சுறுசுறுப்பாக நல்ல நிலையில் இருந்தபோது எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். எனது மகள் என்னுடன் இல்லாவிட்டாலும் உறுப்புகள் ஐந்து பேருக்குப் பயன்படும் வகையில் தானம் செய்யப்பட்டுள்ளது.

திடீர்னு ஏற்பட்ட உயிரிழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் மகளின் உடல் உறுப்புகள் நான்கு பேர் பயன்படுத்தி அதன் மூலமாக எங்களுடன் உயிர் வாழ்கிறார்கள் என்பது மன நிம்மதியைத் தருகிறது” என்றார்.
ஓவியாவின் இறுதிச்சடங்கின் போது, பாரம்பர்ய முறைப்படி இறுதிச் சடங்கு நடைமுறைகளை முடித்து விட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டபோது, அங்குக் குழுமி இருந்த ஓவியாவின் உறவினர்கள், பொது மக்களின் அலறல் சத்தம், ஒருபுறம் நெஞ்சைப் பதற வைத்தது.
ஓவியா மீண்டும் மறுபிறவி எடுத்ததைப்போல, குறைந்தபட்சம் ஐந்து பேர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கப் போகிறார் என்ற தன்னம்பிக்கையை சமூகத்தில் விதைத்திருக்கிறார்கள் ஓவியாவின் பெற்றோர்.