
சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம்
கடந்த 29.08.2025 அன்று திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு கல்வி நிதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
அப்போது அவர், “பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 43 லட்சம் மாணவர்களும் 2.2 லட்சம் ஆசிரியர்களும் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையையும், அதன் மூலம் மொழிக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறேன்,” என்றார்.
இதற்கிடையில் சசிகாந்த் செந்திலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
`இது மடைமாற்றம்’ – செல்வப்பெருந்தகை பேட்டி
அவருக்கு பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை,
“திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும். ஏனெனில் தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் ஓட்டு திருட்டு பிரச்சாரம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை மடைமாற்றம் செய்கிறோமோ என்கிற அச்சம் இருக்கிறது.
ஆகவே தலைவர் ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். உங்களுடைய உண்ணாவிரதத்தை இதோடு முடித்துக்கொள்ளுங்கள். நல்ல நோக்கத்தோடு செய்திருக்கிறீர்கள். ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல. தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு பிரச்சாரத்துக்கு நாமே தடையாக இருந்துவிடக்கூடாது,” எனப் பேட்டி கொடுத்தார்.
இவரது பேட்டி கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்கு காரணம்
இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர்,
“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி இருந்தபோது எழுந்த சர்ச்சைகளால், பலர் அப்பதவிக்கு முயற்சித்தனர்.
சசிகாந்த் செந்திலும் முயன்றார். ஆனால் அவரை அகில இந்திய தலைமை தேசிய அரசியலில் பயன்படுத்த திட்டமிட்டது. மறுபக்கம் ப. சிதம்பரத்தின் ஆதரவும் கார்கேயின் செல்வாக்கும் காரணமாக செல்வப்பெருந்தகை தலைவர் ஆனார். ஆனால் சமீப காலமாக பெருந்தகை மீது புகார்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக காமராஜர் பவன் விவகாரம், தமிழக பகுஜன் சமாஜ் கட்சி, யூடியூபரின் குற்றச்சாட்டு ஆகியவை கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இதையடுத்து தான் பெருந்தகையை மாற்ற டெல்லி தலைமை ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
எனவே தான் மாநிலத் தலைவர் பதவியை பிடிக்க மீண்டும் தனது அரசியல் ஆட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறார் சசிகாந்த். இது பெருந்தகைக்கும் தெரியும். எனவே தான் அவர் இந்த போராட்டத்தை மடைமாற்றம் செய்யும் செயல் எனக் கூறி அரசியல் செய்திருக்கிறார்,” என்றனர்.
சசிகாந்த் ஆதரவாளர்கள் சொல்வதென்ன?
ஆனால் இதை முற்றிலும் மறுக்கிறார்கள் சசிகாந்த் ஆதரவாளர்கள்.
“கல்வி நிதி வழங்காததால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தான் சசிகாந்த் போராடுகிறார். ஆனால் அவர் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டுத்தான் இதையெல்லாம் செய்கிறார் என பலர் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள்,” என்றனர்.

செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் சொல்வதென்ன?
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள்,
“தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பா.ஜ.க. எப்படியெல்லாம் முறைகேடு செய்கிறது என்பது குறித்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
தலைவர் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக திருநெல்வேலியில் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த நேரத்தில் உண்ணாவிரதம் வேண்டாம் என்று தலைவர் எதார்த்தமாகவே தெரிவித்தார். ஆனால் அதை பலர் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக திரித்து பேசி வருகிறார்கள்,” என்றனர்.