• September 2, 2025
  • NewsEditor
  • 0

வெயிலும் மழையும் மாறி மாறி வரும் சீசனில் பாம்புக்கடிகளைப் போலவே பூச்சிக்கடிகளும் அதிகரித்து விட்டது.

இதனால் சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். சென்னை, ஆவடி, கண்ணப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்த 19 வயது சர்மிளா, சில மணி நேரத்துக்கு முன்னால் பூச்சிக் கடித்து இறந்திருக்கிறார்.

எந்த பூச்சி அல்லது எந்த வண்டு விஷமற்றது, லேசான விஷமுள்ளது, கதண்டுபோல உயிர் ஆபத்தையே ஏற்படுத்தக் கூடியது என்பது இன்றைக்கு பலருக்கும் தெரிவதில்லை.

இதன் காரணமாகவே பூச்சிக்கடி ஒவ்வாமை காரணமாக சில உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அது பூச்சியோ அல்லது வண்டோ அல்லது கதண்டு என்கிற குளவியோ எது கடித்தாலும் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என அவசரகால மருத்துவர் சாய் சுரேந்தர் விளக்கமாக சொல்கிறார்.

பூச்சிக் கடி

மழையும் வெயிலும் மாறி மாறி வருகிற காலகட்டத்தில் பூச்சிக்கடிகளை விட அதிகப்படியாக நான் உங்களை எச்சரிக்க விரும்புவது கொசுக்கடிகளைப்பற்றி தான்.

இந்த காலகட்டத்தில் இலைகள் எல்லாம் உதிர்ந்து போய் கிடக்கின்றன. அவற்றில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மக்களை அதிகமாக கடிக்கின்றன.

விளைவு டெங்கு காய்ச்சல் தற்போது அதிகரித்துவிட்டது. மனிதர்களைக் கொல்வதில் மற்ற எல்லா உயிர்களையும்விட பூச்சியினத்தைச் சேர்ந்த கொசுக்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. அதனால் கொசுக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இனி பூச்சிக்கடிகளைப் பற்றி சொல்கிறேன்.

பூச்சி மற்றும் வண்டுகளை பொறுத்தவரை எது நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்; எது நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாது; யாருக்கு ஒவ்வாமை ஏற்படலாம் என்கிற விஷயங்கள் எல்லாம் பிரச்னை வரும் வரையில் நமக்கு தெரிவதில்லை.

அதனால், ஒரு பூச்சியோ அல்லது வண்டோ கடித்து விட்டால் அந்த இடத்தை உடனே சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள்.

அவசரகால மருத்துவர் சாய் சுரேந்தர்
டாக்டர் சாய் சுரேந்தர்

பூச்சி அல்லது வண்டு கடித்த இடத்தில் நடுவில் ஒரு புள்ளி அல்லது சிறு கொப்புளம் அதை சுற்றி சிவப்பானத் திட்டுக்கள் இருந்தால், உடனே அருகில் இருக்கிற மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்.

முடிந்தால் எமர்ஜென்சி மருத்துவரைக்கூட பார்த்து விடுங்கள். அங்கே உங்களுக்கு உடனே ஒவ்வாமை வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியைப் போட்டு விடுவார்கள்.

சிலருக்கு உடல் முழுக்க வீக்கங்கள் வரலாம். சிலருக்கு அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனக் கூடிய உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை ஏற்பட்டு விடலாம்.

இதை மருத்துவர்கள் நாங்கள் கண்டறிந்து உடனே அதை தடுப்பதற்கான ஊசியை போட்டு விடுவோம். கடிபட்ட இடத்தில் மஞ்சள் அல்லது சுண்ணாம்பைத் தடவிக்கொண்டு, இன்னுயிரை இழக்காதீர்கள்.

தேள், கதண்டு போன்ற விஷப்பூச்சிகளை நம்மால் அடையாளம் காண முடியும். அப்படிப்பட்டவை கடித்தால் அதற்கான சிகிச்சையை அளிப்போம்.

ஒருவேளை என்னப் பூச்சி கடித்தது என்பது தெரியவில்லை என்றால் கானாக்கடிக்கான சிகிச்சையை வழங்குவோம்.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்

மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டத்தில் தோட்டம் போடுவதில் பலரும் ஆர்வமாக இருக்கிறோம். அப்படி தோட்டம் வைத்திருப்பவர்கள் அதை சுத்தமாக வைத்திருங்கள்.

குறிப்பாக, மழையும் வெயிலும் மாறி மாறி வருகிற இந்த சீசனில் தோட்டத்தில் குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவை பூச்சிகள், வண்டுகள் ஏன் பாம்பு, தேள்கூட வந்து ஒளிவதற்கான இடமாக இருக்கிறது.

தோட்டத்தில் நீங்கள் நடப்பதற்கு சிமென்ட்டில் பாதை போட்டு வையுங்கள். வெறும் காலில் நடக்காதீர்கள். ஒருவேளை ஏதாவது புது வகையான பூச்சி அல்லது வண்டை வீட்டுத் தோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், அதை போட்டோ எடுத்து கூகுளிடம் கேட்டால், அது விஷம் உள்ளதா அல்லது விஷமற்றதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை அது விஷம் உள்ளதாக இருந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுங்கள்.

சில வண்டுகள் காதுக்குள் சென்று விட்டால் காது கேளாமையைகூட ஏற்படுத்தி விடும் என்பதால், இப்படியொரு பிரச்னை வந்தது என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவரை நாடுங்கள்.

மருத்துவர்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் அல்லது மருத்துவமனை வெகு தூரத்திலிருந்த காலகட்டத்தில் கை வைத்தியங்களை நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள்.

அதில் சில உதவியும் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு தெருவுக்கு ஒரு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதனால், கை வைத்தியம் செய்து கொள்கிறேன் என உங்கள் உயிருக்கோ அல்லது உங்கள் குழந்தைகளின் உயிருக்கோ அவசியமற்ற பிரச்னைகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்’’ என்கிறார் டாக்டர் சாய் சுரேந்தர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *