
சென்னை: ‘கல்வி நிதி வழங்குவதில் அரசியல் செய்ய வேண்டாம்’ என்று மத்திய அரசுக்கு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் 'கல்லூரி களப்பயணம்' என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்லூரிகளைப் பார்வையிடுகின்றனர்.
அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான ‘கல்லூரி களப்பயணம்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் கிராந்தி குமார், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் பி.ஹரிகரன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.