
கன்னட நடிகர் தர்ஷன் தன் ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற ஜாமீனை விமர்சித்தவர்களில் ஒருவர் கன்னட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா.
தொடர்ந்து எழுந்த விமர்சனங்களாலும் சில சட்ட சிக்கல்களாலும் நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நடிகை ரம்யாவுக்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆபாசமான செய்திகளை அனுப்பியும், பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் எனவும் மிரட்டியிருக்கின்றனர்.
இது தொடர்பாக நடிகை ரம்யா ஜூலை 28 மாலை, பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங்கிடம் 43 சமூக வலைதள கணக்குகள் மீது புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், “நடிகர் தர்ஷனின் வழக்கில் என் கருத்தில் அதிருப்தியடைந்த ரசிகர்கள், எனது இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு பல்வேறு கணக்குகள் மூலம் இழிவான, அருவருப்பான மற்றும் மோசமான செய்திகளை அனுப்பியுள்ளனர்.
எனக்கு வந்த செய்திகள் மிகவும் அருவருப்பானவை. பெண் வெறுப்பு (misogynistic) நிறைந்தவை, அவற்றை என்னால் புகாரில் கூட மீண்டும் குறிப்பிட முடியவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரம்யா, “பொது மக்களுக்கு நீதி குறித்த நம்பிக்கையை அளிப்பதற்காக, நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் செய்தியைப் பகிர்ந்தேன்.
அதன்பிறகு, இத்தகைய இணையத் தாக்குதல்கள் (trolling) தொடங்கியது. எதன் மூலமும் பெண்களை முடக்கிவிட முடியும் எனக் கருதுபவர்களுக்கு எதிராக இந்தப் புகாரை நான் அளித்துள்ளேன்.
43 சமூக வலைதள கணக்குகள் மீது புகார் அளித்துள்ளேன். அவர்களில் சிலர் என்னை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் மிரட்டினர்.

பொது சமூகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எனக்கே இப்படியெல்லாம் நடந்தால், மற்றவர்களுக்கு என்ன நடக்கும்? பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
மேலும் வழக்கை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றியுள்ளார். ஆண்களுக்கு இருக்கும் அதே சுதந்திரம் பெண்களுக்கும் உண்டு.
நடிகர் தர்ஷன் தனது ரசிகர்களிடம் இதுபோன்ற செய்திகளைப் பகிர வேண்டாம் என்று கேட்டிருக்க வேண்டும். பிரபலங்கள் மற்றும் பொது முகங்களாகிய நாம் சட்டத்தைப் பின்பற்றி மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இதற்கு முன்னதாக, சூப்பர் ஸ்டார்களான யாஷ் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரும் இணையத்தில் குறிவைக்கப்பட்டனர். அப்போதும் நான் இந்த விவகாரத்தை எழுப்பினேன்.
முன்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பெண்களின் பெயரில் போலிக் கணக்குகளைப் பயன்படுத்தி ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டனர்.
இந்த விவகாரத்தில் திரைத்துறையினரிடமிருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால் பல பெண்கள் தங்கள் மரியாதை கெட்டுவிடும் என்ற பயத்தில் பேச அஞ்சுகின்றனர்” என்றார்.
நடிகை ரம்யாவின் புகாரைத் தொடர்ந்து ஆபாசமான செய்திகளை அனுப்பிய வழக்கில், காவல்துறை நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது.

இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள்.
கைதானவர்கள் சிறிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். சில குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர், மேலும் பலர் தங்கள் பதிவுகளை நீக்கிய பிறகு பதுங்கியுள்ளனர்.
இருப்பினும், காவல்துறைக்கு போதுமான தகவல்கள் கிடைத்துள்ளன, அவர்களைப் பிடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
நடிகை ரம்யாவை இலக்காகக் கொண்ட ஆபாசமான மற்றும் பெண் வெறுப்புத் தாக்குதல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ‘திரைத்துறையில் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான அமைப்பு’ (FIRE) கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.