
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘BAD GIRL’.
அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “ஒரு கலைப்படைப்பு சமூகத்திலிருந்துதான் உருவாகிறது.
ஆனால் நம் சமூகம் கலைப்படைப்புகளைப் பார்த்து இதுதான் சமூகத்தைக் கெடுகிறது என்கிறார்கள்.
அந்தவகையில் ஒரு மோசமான கலைப்படைப்பு சமூகத்தைக் கெடுகிறது. ஒரு நல்ல கலைப்படைப்பு சமூகத்தைச் சிந்திக்க வைக்கிறது.
சில சித்தாந்தங்களை சினிமா எதிர்த்துக் கேள்விகேட்கும் போது நமக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபம் நியாயமானதும்தான்.
எத்தனையோ கோடிகளை ஒழுக்கம் இல்லாத படைப்புகளுக்குக் கொட்டி இருக்கிறோம்.
எத்தனையோ மோசமான படங்களுக்கு கை தட்டி விசில் அடித்திருப்போம். அதனால் கொஞ்சம் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த விமர்சனம் கூர்மையான ஒன்றாக இருக்கலாம்.
ஆனால் அந்த விமர்சனம் கழுத்தைத் துண்டிக்கும் வகையில் இருக்கக்கூடாது. குறிப்பாக ஒரு கலைஞனின் கழுத்தைத் துண்டிக்கும் வகையில் இருக்கக்கூடாது.
இந்தப் படத்தைப் பற்றி நிறைய விமர்சனங்கள். சென்சாரில் நிறையப் போராட்டம்.

ஒரு படம் 50 சதவிகிதம் பிடிக்கும். 50 சதவிகிதம் பிடிக்காது. இதுதான் ஒரு திரைப்படம் செய்ய வேண்டிய வேலை.
ஒரு படம் 100 சதவிகிதம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டால், அந்தப் படத்தில் உண்மை இல்லை என்று அர்த்தம்.
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு என்னிடம் பணிபுரியும் ஆசிஸ்டன்ட் டைரக்டர்கள் விவாதத்தை நடத்தினார்கள்.
அவர்கள் எல்லோரும் மாறி மாறி கருத்துக்களை முன்வைத்தார்கள். அப்போது அந்த இடத்தில் ஒரு பெண் ஆசிஸ்டன்ட் டைரக்டர் இருந்தார். அவரிடம் கேட்டோம் படம் எப்படி இருக்கிறது என்று.
அந்தப் பெண் இந்தப் படம் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னார். அதுதான் இந்தப் படத்திற்கான வெற்றி” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…