
பிரபல தெலுங்கு நடிகர் பாலய்யா என்று அழைக்கப்படுகிற பாலகிருஷ்ணா, சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இத்தனை வருடம் அவர் ஹீரோவாக நடித்து வருவதை ஒட்டி, லண்டனை சேர்ந்த உலக சாதனை புத்தகத்தில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் இடம் பெற்ற முதல் இந்திய நடிகர் பால கிருஷ்ணாதான். இதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், நடிகை ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், அவரின் வசனங்களைப் பேசி பாராட்டியுள்ளார். அதில், "சில பன்ச் வசனங்களை பாலய்யா பேசினால் தான் அழகு. பாலய்யா என்றாலே நேர்மறை எண்ணம்தான். எதிர்மறை எண்ணங்கள் அவருக்குச் சிறிதும் கிடையாது. அவர் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியும், சிரிப்புமே நிறைந்திருக்கும். அவருக்குப் போட்டியே வேறு யாருமில்லை, அவர்தான். அவர் படம் வெற்றி பெற்றால், அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.