
“சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்” என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
‘நாட்டைக் காப்போம்’ அமைப்பு சார்பில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் சண்முகம் பேசும்போது,
“மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சாதி கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளில் குற்றவாளிகளுக்கு காவல்துறை சரியான தண்டனை பெற்று தருவதில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஆண்டு தோறும் முதலமைச்சர் தலைமையிலேயே எஸ்.சி., எஸ்.டி. ஆணைய கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால், ஆட்சியர்கள் தலைமையில் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டிய வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெறுவதில்லை.
இந்த கூட்டங்கள் நடக்காததாலேயே பல சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெறுகின்றன. சாதி கொலைகளைத் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் அரசு சார்பில் செய்யப்படுவதில்லை.

நெல்லை ஆட்சியர் அலுவலகம்
அரசு அலுவலர்களின் அணுகுமுறை மாற வேண்டும். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் குறிப்பிட்ட ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடக்கும் ஊர் என்று தெரிந்தும் ஒரே சமூக அதிகாரிகளை வைத்திருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் அனைவரும் சாதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்களை வைத்திருக்கிறார்கள். எல்லா மக்களும் கொடுக்கும் வரிப்பணத்தில் தான் இவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள்.
சாதிக் கொடுமைகள்
சாதிக் கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது.
திமுக, அதிமுகவினர் ஆட்சியைத் தக்கவைக்க சாதி சார்ந்த வேட்பாளர்களை நிறுத்தி, சாதி கெட்டிப்படுத்தப்படுவதற்கு வழியமைத்து, தமிழக மக்களை சாதி ரீதியாகப் பிளவுபடுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
பாஜக தங்களுடைய அரசியல் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் சாதிக் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சாதிப் பிளவுகளைப் பயன்படுத்தியே பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. அவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது ஆபத்தானது.

காதல் திருமணம்
காதலர்கள் யாரும் தயவுசெய்து அண்ணாமலை பேச்சைக் கேட்டு பாஜக அலுவலகத்துக்குச் சென்று விடாதீர்கள். அவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெற்றோரை அழைத்து பிரித்து விடுவார்கள்.
காவல்துறையை நம்பியும் காதலர்கள் செல்ல முடியாது. பெரும்பாலும் காவல்துறையினர் இத்தகைய திருமணங்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை.
கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறிய மாநிலம் ஒன்றில் இவ்வளவு சாதிப் படுகொலைகள் நடப்பது தமிழ்நாட்டிற்கே அவமானம்.
வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனி சட்டத்தை இயற்ற அரசு முன்வர வேண்டும்.
சாதி வெறியர்களுக்காக அரசாங்கமும், சமூகமும் பணிந்து விட்டால் யாராலும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது” என்றார்.