
தமிழ் சினிமாவில் நீதிமன்றக் கதைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. சிவாஜி அறிமுகமான ‘பராசக்தி’ படத்தில் நீதிமன்றக் காட்சி வசனம் முக்கிய ஹைலைட்டாக இருந்தது.
அதன்பிறகு மோகன் நடிப்பில் ‘விதி’ வந்தது. ஆரூர் தாஸ் எழுதிய வசனங்கள் ஆடியோ வடிவில் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த ஃபீவர் தெலுங்கு தேசத்தில் பரவிக் கிடக்கிறது.
பெரிய ஹீரோக்கள் நடிக்காமல் சாதாரண நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட ‘கோர்ட்’ திரைப்படம் தியேட்டரில் கொண்டாடப்பட்டது.
இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பெரிதாகப் பேசப்பட்ட படங்களையெல்லாம் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வருபவர், நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன்.
பிரசாந்தின் தந்தையான இவர் ஏற்கெனவே இந்தியில் வந்த ‘அந்தாதூன்’ படத்தை ‘அந்தகன்’ என்ற தலைப்பில் ரிலீஸ் செய்தார்.
தேவயானியின் மகள்
இப்போது தெலுங்கில் வெளிவந்த ‘கோர்ட்’ படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வைத்திருந்தார். அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஶ்ரீதேவியைச் சுற்றியே கதை சுழல்கிறது.
அந்த 17 வயது இளம்பெண் கதாபாத்திரத்துக்கு ஏகப்பட்ட பெண்களைத் தேர்வு செய்து பார்த்தார், ஆனால் சரிப்பட்டு வரவில்லை. இறுதியில் தேவயானியின் மகள் பிரியங்காவைத் தேர்வு செய்திருக்கிறார்.
‘கோர்ட்’ படத்தில் இடம்பெற்ற ஜாம்பவான் வக்கீல் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். புத்திசாலியான, திறமையான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார்.

தேவயானியின் மகள் இனியா, ‘ஜீ தமிழ்’ சேனலில் பாட்டு பாடி பிரபலமாகி வருகிறார். இன்னொரு மகள் பிரியங்காவுக்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் ஆர்வம் அதிகம்.
கல்லூரியில் படிக்கும்போதே விஸ்காம் கோர்ஸ் எடுத்துப் படித்தார். அதன்பிறகு ‘பொன்னியின் செல்வன்’ ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தார்.
பிரியங்காவின் துறுதுறு மற்றும் அமைதியான சுபாவம் பார்த்ததும் தியாகராஜனுக்கு பிடித்துவிட்டது. ‘கோர்ட்’ படத்தின் முக்கியமான சில காட்சிகளை நடித்துக் காட்டச் சொன்னார்.
பிரியங்கா பிரமாதமாக அசத்த, பிரமித்துப் போன தியாகராஜன், “மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கணுமா?” என்று தேவயானியிடம் சொல்ல, அவர் அப்படியே நெகிழ்ந்து கண்கலங்கிவிட்டாராம்.
‘கோர்ட்’ படத்தில் இடம்பெறும் ஹீரோயின் அம்மா கதாபாத்திரத்தில் தாமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறாராம் தேவயானி.

இப்போது ‘கோர்ட்’ ரீமேக் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலான சினிமாக்களில் நட்சத்திரங்களுக்கு பேசிய சம்பளத்தை முழுவதுமாகக் கொடுக்க மாட்டார்கள்.
இந்தப் படத்தில் ஒப்பந்தமாகும் நடிகர், நடிகைகள் அத்தனை பேருக்கும் அவர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல சம்பளம் தந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறாராம் பிரசாந்தின் தந்தை.
தெலுங்கில் ‘கோர்ட்’ படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கினார், தமிழில் தியாகராஜன் இயக்கி வருகிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கதிரேசனின் மகன், தேவயானியின் மகள் பிரியங்காவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…