
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், கோயில் நிலத்தில் கல்லூரி கட்டடம் அமைப்பதற்காக இந்து அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த மனுவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கவே, அதற்கு எதிராக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கைத் தொடர நீங்கள் யார்?
இந்த நிலையில், அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “முதலில் இந்த வழக்கைத் தொடர நீங்கள் யார்?” எனக் கோபமாக கேள்வியெழுப்பினர்.
அதற்கு ரமேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பக்தர் என்ற முறையில்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
கல்லூரி கட்டுவதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கீழ் வரக்கூடிய கொளத்தூர் சோமநாதர் ஆலயத்தின் இடம்.
கல்லூரி கட்டுவதற்கு கோயில் நிதியும் பயன்படுத்துகிறார்கள். எனவே கல்லூரி கட்டடம் கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “கோயில் நிலத்தில் கல்லூரி கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், இந்து சமய அறநிலையத்துறை அதற்கான வாடகையாக 3,19,000 ரூபாய் கோயிலுக்கு வழங்கி வருகிறது.
எனவே, கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடம் பயன்படுத்தப்படுகிறதே தவிர இலவசமாக அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கிடையாது” என்று கூறினார்.

இதில் என்ன தவறு?
அதைத்தொடர்ந்து நீதிபதிகள், “மாணவர்களின் எதிர்காலத்திற்காக கல்லூரி அமைக்க இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்திருக்கிறது.
இதில் என்ன தவறு இருக்கப் போகிறது. கோயில் பணத்தில் கல்விக்கு செலவிடக் கூடாது என நீங்கள் கேட்பது ஏன்?
அப்படி செலவு செய்வதில் ஒன்றும் தவறு கிடையாது. எனவே உங்களது இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்” எனக் கூறி உத்தரவிட்டார்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் கோயில் உண்டியலில் பணம் செலுத்துவது கோயிலை மேம்படுத்துவதற்காகத்தான்.
ஆனால், தி.மு.க அரசு அறநிலையத்துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகளுக்கு செலவிடுகிறார்கள்.
இது எந்த வகையிலும் நியாயம் கிடையாது. இது ஒரு சதிச் செயல்” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு தி.மு.க உட்பட பல்வேறு சமூக அமைப்புகள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன.
இவ்வாறிருக்க, தற்போது உச்ச நீதிமன்றமும் கோயில் பணத்தில் கல்விக்காக செலவிடுவதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறது.