• August 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை லலித் கலா அகாடமியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிவரை ஒருவார காலம் HARMONY Forms என்ற தலைப்பில் ஐந்து சிற்பக்கலை இளைஞர்கள் இணைந்து தங்களது முதல் சிற்பக்கலை கண்காட்சியை நடத்தி முடித்திருக்கின்றனர். 

பல இடங்களிலிருந்து பல்வேறு ஆளுமைகளும், பொதுமக்களும் குழந்தைகளும் என இக்கண்காட்சிக்குக் கூட்டம் அலைமோதியிருக்க, அந்த இளைஞர்களைச் சந்தித்து அவர்களிடம் உரையாடத்தொடத் தொடங்கினோம்.

சிற்பக்கலைஞர் பாலாஜி

முதலில் பேசிய பாலாஜி, 

“எனக்கு சொந்த ஊர் கரூர் பக்கத்துல பஸ்ஸே வராத ஒரு சின்ன கிராமம். நான்தான் என்னோட தலைமுறையில கல்லூரில கால் எடுத்து வச்சுருக்கேன். என்னோட தாத்தா, அப்பா எல்லாருமே எலி பிடிக்கிற வேலை தான் செஞ்சாங்க. என்னுடைய வாழ்வியல் எல்லாமே அது தான். அதுனால இங்க அந்த வாழ்வியலைப் பிரதிபலிக்கிற மாதிரி எலி, எறும்புகளை கருவா வச்சி ஸ்கல்பர் உருவாக்கியிருக்கிறேன்.

நிறைய குழந்தைகளைக்குப் பிடிச்சிருக்கு ஆசையோட எல்லாருமே பாக்குறாங்க. ஒருகாலத்துல இந்தத் தொழிலை எங்கப்பா பாக்குறாங்கன்னு சொல்றதுக்கே ரொம்ப கூச்சமாயிருக்கும் அதை இப்போ தைரியமா வெளிப்படையா காட்டியிருக்கேன் நிறையப் பேர்க்குப் பிடிச்சிருக்கு” என மனம் பொங்க பேசி முடித்தார் பாலாஜி. 

கண்ணன்
கண்ணன்

இரும்புகளைக்கொண்ட சிற்பங்களை உருவாக்கிய கண்ணன் அதன் பக்கத்திலே அழைத்துக்கொண்டு அதைப்பற்றி விளக்கி பேசத்தொடங்கினார்,

“இந்தக்கண்காட்சிதான் எங்களோட திறமையை வெளிப்படைத்துறதுக்கான முதல் மேடையா அமைஞ்சிருக்கு. நாங்க எல்லாருமே வேற வேற ஆர்ட்டிஸ்ட் கிட்ட வேலைப்பார்த்துட்டேதான் இந்தப் பொருள்களையும் உருவாக்குனோம்.

எனக்கு இரும்பு பொருள்கள் மேல சின்ன வயசுல இருந்தே ஆர்வம்ங்கிறதுனால அதை வச்சி வித்தியசமா பண்ணலாம்ன்னு உலகத்துல தண்ணீர் தேவையைக் குறிக்கிற மாதிரியும், மனித உணர்வுகளைப் பற்றியும், ஆக்டோபஸைப் பத்தி நமக்கு பெரும்பாலும் தெரியாது.

ஆனா நிறைய நாடுகளில் அதை வீடுகளில்ல வளர்க்கிறாங்க. அதையும் என்னோட ஸ்கல்ப்சர்ல காமிக்கணும்ன்னு நினைச்சேன். நிறையப் பேர் தொடர்ந்து பார்க்கவர்றது ரொம்ப சந்தோசமா இருக்கு”  என்றார். 

சூர்யா
சூர்யா

அடுத்த பேசிய சூர்யா,

“என்னோட பேரு சூர்யா சேகர். எனக்கு சொந்த ஊர் கூவத்தூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமம். இதுக்கு முன்னாடி ஆசிரியரா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். அந்த வேலை மேல பெரிதா ஈடுபாடு இல்லாதனால சின்ன வயசுல இருந்தே கலைமேல ஆர்வம். படிச்சதும் இது தான். அதுனால இந்த ஃபீல்டுக்குள்ளே வந்துட்டேன். வந்து கொஞ்ச நாள்லயே இப்படி ஒரு கண்காட்சி.

இதுதான் எங்களுக்கான முதல் தொடக்கம். ஒரு கேம்ல ஒரு பால் வச்சி மொத்த விளையாட்டையும் நிப்பாட்டுறமாதிரி செஞ்சிருப்பேன். இங்க பார்க்கவர்றவங்க எல்லாருக்குமே அதை ரொம்ப பிடிச்சிருக்கு. அதை அரசியலா சமூகத்தோட சூழலை வச்சி பார்க்கிறாங்க. எங்களுடைய முதல் கண்காட்சிக்கு இப்படியான வரவேற்பு ரொம்ப நெகிழ்வா இருக்கு” என்று நெகிழ்கிறார் சூர்யா. 

ராம்கி
ராம்கி

காகிதம் வச்சி பல பொருள்களை உருவாக்கிய ராம்கி இது பற்றி பேசும் போது, 

“எங்க எல்லாருக்குமே இது ஒரு முதல் முயற்சி தான். நாங்க எல்லாருமே ஒரே மாதிரியான கருவை எடுத்து பண்ணல. ஒரே மாதிரியானதாக இல்லாம கலவையா நிறைய பொருள்களைக்கொண்டு வித்தியாசமான பண்ணலாம்னு முடிவு பண்ணி நா வெறும் பேப்பர் வச்சி பண்ணேன். பேப்பர்ல நிறைய பெயிண்டிங்க்ஸ் பண்ணி பார்த்திருப்போம்.

ஆனா ஸ்கல்பசரா என்ன உருவாக்கமுடியும் யோசிச்சு பண்ணி புது முயற்சி தான் இது.  நிறையப் பேர் அதை நிறைய கோணங்களில் பார்க்கிறாங்க ஒரு ஆர்ட்டிஸ்க்கு அதை விட வேற என்ன வேணும்ன்னு சொல்லுங்க. இதைப்போல எங்களோட முயற்சிக்கு எல்லாரும் எப்பவும் ஆதரவு தரணும்ங்கிறதான் எங்களோட வேண்டுகோள்” என நம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறார் ராம்கி ரவி.

யோகேஸ்வரன்
யோகேஸ்வரன்

கடைசியாகப் பேசத்தொடங்கிய யோகேஸ்வரன், 

“எல்லாரும் சொன்ன மாதிரி இது எங்களோட முதல் கண்காட்சி. நிறைய மக்கள் இவ்வளோ ஆசையோட பார்க்கவர்றாங்கிறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இங்க நா பெண்களோட நிலையைக் குறிக்கிற மாதிரி ஒண்ணு பண்ணிருக்கேன். அதை ஈஸியா பெண்கள் கனெக்ட் ஆகிடுறாங்க. அதுவே என்னோட சக்ஸஸ்ன்னு நினைக்கிறேன். கோட் பத்தியும் செஞ்சிருக்கேன்.

இந்தக் கண்காட்சியை எங்க வீடுகளில் இருந்தும் பார்க்க வந்தாங்க. அவங்களுக்கு இது என்னங்கிறது தெரியல. ஆனா ஒரு பெரிய நம்பிக்கை உருவாகியிருக்கு. எங்களை வியப்பா பார்க்கிறாங்க. இதோட நாங்க நிக்க மாட்டோம். எங்களோட அடுத்தடுத்த நகர்வுக்கு இந்தக் கண்காட்சி உத்வேகமா அமைஞ்சிருக்கு. இன்னும் நல்லா தீவிரமா ஓர்க் பண்ணனுங்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு” என நமக்கும் ஒரு சியர்ஸ் சொல்கிறார் யோகேஸ்வரன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *