
புதுடெல்லி: 2023-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளால் ஏற்பட்ட 1,72,890 உயிரிழப்புகளில் 40% க்கும் அதிகம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்டதாகவும், மது அருந்தி வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதாகவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வருடாந்திர சாலை விபத்துகள் குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.
2023 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்த 54,568 இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்றும், இதில் 39,160 பேர் பைக் ஓட்டுநர்கள் என்றும், 15,408 பேர் பைக்கில் பயணம் செய்தோர் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து சாலை விபத்து உயிரிழப்புகளில் இது 31.6% ஆகும். இதேபோல், சீட் பெல்ட் அணியாத வாகன ஓட்டிகள் 16,025 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8,441 ஓட்டுநர்கள் மற்றும் 7,584 பயணிகள் அடங்குவர். இது 2023-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த இறப்புகளில் 9.3% ஆகும்.