• August 29, 2025
  • NewsEditor
  • 0

தற்போது வறட்சிநிலையில் இருக்கும் சிவகங்கை மாவட்டத்தில், முத்துப்பட்டி தெப்பக்குளத்தின் நீர்வழிப்பாதையில் 220 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை, முத்துப்பட்டியைச் சேர்ந்த நண்பர்கள் நற்பணி மன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊரில் கல்வெட்டு இருப்பதாகவும், அதில் உள்ள செய்தியை வாசித்து தரும்படியும் சிவகங்கை `தொல்நடை குழு’ என்ற அமைப்பிற்கு தகவல் அளித்தனர்.

சிவகங்கை முத்துப்பட்டியில் அமைந்துள்ள பெரிய தெப்பக்குளத்தின் கிழக்குப் பகுதியில், தண்ணீர் வரத்து மடையின் கட்டுமான மேல்பகுதியில் கல்வெட்டு ஒன்று உள்ளது.

அதில் 220 ஆண்டுகள் பழமையான, சிவகங்கையின் முதல் ஜமீன்தார் கௌரி வல்லவ மகாராஜாவின் கல்வெட்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வெட்டு

இதை ஆய்வு செய்த சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் புலவர் கா.காளிராச மற்றும் செயலர் நரசிம்மன் கூறுகையில்:

இந்த கல்வெட்டு, இந்த தெப்பக்குளத்திற்கு மேல்பகுதியில் உள்ள பாத்திப் பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கற்பாதை அமைத்ததைக் குறிப்பிடுகிறது.

மேலும் இந்த தெப்பக்குளம் செம்பூரான் கல்லால் நான்கு திசைகளிலும் அகலமான படிக்கட்டுகளுடன் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. அதோடு, இந்த தெப்பக்குளத்தில் ஐந்து இடங்களில் தண்ணீரை இறைக்கும் கமலை அமைக்கக் கால்களும் நீட்டப்பட்டுள்ளன.

இதன் மூலம், இது விவசாயத் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

கல்வெட்டில் இருந்த செய்தி

நீளமாக ஐந்து வரிகள் எழுதப்பட்டுள்ளன. அதில், சாலிவாகன சகாப்த ஆண்டின் படி 1805ஆம் ஆண்டு குரோதன வருஷம், ஐப்பசி மாதம் 12ஆம் தேதி, மேல்பாத்தி பகுதியில் இருந்து வரும் வரத்துக் கால்வாய் தெப்பக்குளத்தில் உள்நுழையும் இடத்தில், முத்து விஜய ரகுநாத கௌரிவல்லப பெரிய உடையாத் தேவர் அறச்செயலாக கற்பாதை அமைத்து கொடுத்ததாக கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு

`நேர்த்திக்கடனுக்காக கோயில் திருப்பணி’ – கல்வெட்டுச் செய்தி

1861ஆம் ஆண்டு துன்மகி வருஷம், பிரான் மலையில் வேங்கைப் புலி சுட்டுக் குத்தியதற்கான பிரார்த்தனைக்காக மகாராஜா போதகுரு இந்தத் திருப்பணியை செய்தார் என கல்வெட்டு தெரிவிக்கிறது.

படமாத்தூர் அருகிலுள்ள சித்தாலங்குடியில் மகாராஜா கோவில் அமைந்துள்ளது. இது சிவகங்கையின் முதல் ஜமீன்தார் கௌரி வல்லவ மகாராஜாவிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில் வழிபட்டு, வேங்கைப் புலி வேட்டைக்குச் சென்ற இரண்டாம் போதகுரு ராஜா, பிரான் மலையில் புலி சுட்டுக் குத்தியதற்காக, படமாத்தூர் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டியதாக அங்கு உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

அதே மன்னர், அந்த நேர்த்திக்கடனுக்காக, சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள மகாராஜா கோவிலுக்கு திருப்பணி செய்ததாக இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மதம், இனம் கடந்த அன்பு

முத்துப்பட்டி என்ற ஊரின் பெயர், முத்து விஜய ரகுநாத என்ற அடைமொழியில் உள்ள “முத்து” என்பதை குறிப்பதாக இருக்கலாம். இவ்வூர், சிவகங்கையை ஆண்ட கௌரி வல்லவ மகாராஜாவால் அனைத்து மதங்களையும் இன மக்களையும் இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இப்பகுதியின் பழைய பெயர் அய்யனார்புரம் என்பதாகும். மக்கள், மகாராஜாவை தங்களது இஷ்ட தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர்.

மேலும், ஊர்மக்கள் தங்களது குழந்தைகளுக்கும் கௌரி என்ற பெயரை இன்றளவும் சூட்டி, மன்னருக்கும் மக்களுக்குமான நெருக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *