
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் ஆற்றில் கொட்டப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுத்துறை சார்ந்த மக்களின் தீர்க்கப்படாத அனைத்து பிரச்னைகளுக்கும் விரைந்து தீர்வு கிடைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்காகப் பெரிய அளவில் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல்முடிக்கரை ஆகிய கிராமங்களில் கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
இதில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அனைத்தும் திருப்புவனம் வைகை ஆற்றுப் பாலத்திற்குக் கீழ் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் தண்ணீரில் மிதந்த மனுக்களை வெளியே எடுத்தனர். பின்பு இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் கா.பொற்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரைப் பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான மனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனடிப்படையில், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடர்பாக அப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில் பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்பட்ட 6 மனுக்களின் நகல்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகப் பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மனுக்களின் நகல்கள் வெளிவந்தது தொடர்பாகக் கடந்த இரண்டு தினங்கள் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவை தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியர் மூலம் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அரசிற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளோர் மீது, உரியச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.