
ஜார்கண்ட் இளைஞர் மனோஜ் டே
யூடியூப் பலரது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. சாதாரண ஒரு மொபைல் போனை வைத்துக்கொண்டு யூடியூப்பில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
எடுத்த வீடியோ மக்களை சென்றடையும் வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். பலர் எத்தனை வீடியோக்களை போட்டாலும், பணம் வருவதில்லை என்று வருந்துபவர்களும் உள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் டே என்ற இளைஞர், இந்தியா முழுவதும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகியுள்ளார்.
7.2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்
அவரது யூடியூப் சேனலுக்கு 7.2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இது தவிர, இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
மனோஜ் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது தந்தை சைக்கிள் பழுது பார்க்கும் ஒரு சிறிய கடை வைத்திருந்தார். அதில் கிடைத்த வருமானத்தில், அரசு பள்ளியில் மனோஜ் படித்தார்.
அவர்களது வீடு ஓடுபோட்ட குடிசை வீடு ஆகும். தொடர்ந்து படிக்க முடியாமல், கிடைத்த வேலையைச் செய்து கொண்டே யூடியூப் சேனல் ஆரம்பித்தார். தன்னிடம் இருந்த மொபைல் மூலம் வீடியோ எடுத்து வெளியிடத் தொடங்கினார்.
எவ்வாறு வீடியோவை எடிட்டிங் செய்ய வேண்டும் என்பதையும், ஆன்லைன் வீடியோக்கள் மூலம் பார்த்து கற்றுக்கொண்டார். ஆனாலும், அவர் வெளியிட்ட வீடியோக்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. “அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்களா?” என்ற சந்தேகம் மனோஜுக்கு எழுந்தது. மூன்று யூடியூப் சேனல்கள் தொடங்கியதில் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

ஒரு சேனலில் அவர் சொந்தமாகப் பாடி வீடியோ வெளியிட்டார். மற்றொரு சேனலில் காமெடி வீடியோ வெளியிட்டார். மூன்றாவது சேனலில் தொழில்நுட்பம் தொடர்பான வீடியோக்களைப் பகிர்ந்தார். இந்த சேனலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ச்சியாக புதுப் புதுவீடியோக்களை வெளியிட்டு, பார்வையாளர்கள் மற்றும் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்தார். அதன் மூலம் பணமும் வர ஆரம்பித்தது. அதை கொண்டு, வீடியோ எடுப்பதற்கான சாதனங்களை மேம்படுத்தி, ஸ்டூடியோவையும் மேம்படுத்தினார்.
இன்றைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்களை நடத்தி வரும் மனோஜ், தரமான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
மாதம் ரூ.10 லட்சம்
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மனோஜுக்கு ரூ.10 லட்சம் யூடியூப் மூலம் வருமானம் வருகிறது. பணம் வர வர வாழ்க்கையும் மாறத் தொடங்கியது.
2019ஆம் ஆண்டு, முதல் முறையாக Maruti Celerio X என்ற காரை விலைக்கு வாங்கினார். காரில் சென்று வீடியோ எடுக்க ஆரம்பித்தார். அடுத்த சில ஆண்டுகளில், அதாவது 2021ஆம் ஆண்டில் Tata Harrier Dark என்ற மற்றொரு காரையும் வாங்கினார். ஆனாலும், அவரது கார் ஆசை குறையவில்லை.
2024ஆம் ஆண்டு Toyota Fortuner Legender காரை சொந்தமாக்கினார். யூடியூப்பில் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, அவரது ஆடம்பரக் கார்களின் எண்ணிக்கையும் கூடத் தொடங்கியது.

ரூ.80 லட்சத்திற்கு புதிய மெர்சிடீஸ் கார்
கடந்த ஜனவரி மாதம், டொயோட்டா கார் விபத்தில் சிக்கி மோசமாக சேதம் அடைந்தது. அது ஒரு ஆட்டோவுடன் மோதியதில் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, மனோஜ் அப்போது காரில் இல்லை.
அந்த கார் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்ததால், அதற்கு பதிலாக புதிய கார் வாங்கப்போவதாக மனோஜ் ஒரு வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் சொன்னபடி, புதிதாக மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். டொயோட்டா கார் இன்சூரன்ஸ் மூலம் கிடைத்த பணமும், டாடா ஹாரியர் டார்க் காரை விற்றதில் கிடைத்த பணமும் சேர்த்து, ரூ.80 லட்சத்திற்கு புதிய மெர்சிடீஸ் காரை வாங்கியுள்ளார்.
மாளிகையான குடிசை
மெர்சிடீஸ் காரை டெலிவரி எடுக்கும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ், மெர்சிடீஸ் காரை டெல்லி டீலரிடமிருந்து வாங்கியுள்ளார்.
டெல்லி டீலர் சில சலுகைகள் வழங்கியதால் அங்கிருந்தே கார் வாங்கியதாக மனோஜ் தெரிவித்துள்ளார். புதிய கார் வாங்கியதையும், அதனுடன் தொடர்பான பல விஷயங்களையும் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிகமான வீடியோக்களாக பகிர்ந்துள்ளார். அதோடு, யூடியூப்பில் கிடைத்த வருமானத்தை கொண்டு புதிய வீடொன்றையும் கட்டியுள்ளார். அவரது பயணத்தை பார்த்து பலரும் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.