
ஸ்பெயின் நாட்டில் உள்ள புனோல் நகரில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ‘லா டோமடினா’ (La Tomatina) என்னும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 27 அன்று தனது 80-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்க வருகின்றனர்.
இதில் டன் கணக்கான பழுத்த தக்காளிகள் ஒருவர் மீது ஒருவர் வீசப்படுகின்றன. இதன் விளைவாக, புனோல் நகரின் தெருக்கள் தக்காளி சாறால் நிரம்பி வழிகின்றன.
திருவிழாவின் நிகழ்வுகள்
லா டோமடினா திருவிழா பெரும்பாலும் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. புனோல் நகரின் மையப்பகுதியில் லாரிகள் மூலம் ஏராளமான தக்காளிகள் கொண்டு வரப்படுகின்றன. மரபுப்படி தக்காளி ஒருவர் மீது ஒருவர் வீசப்படுகிறது.
தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இந்த உணவுப் போர் முடிவடைகிறது. பின்னர், தீயணைப்பு வாகனங்கள் தெருக்களை தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்கின்றன. பங்கேற்பாளர்கள் அருகில் இருக்கும் ஆறுகளில் தங்களை சுத்தம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.
திருவிழாவின் நோக்கம் என்ன?
புனோல் நகரத்தில் உள்ளூர் மக்களின் கலாச்சார மரபாக 1945-ம் ஆண்டு தொடங்கிய இந்தத் திருவிழா உலகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. இதனால் புனோல் நகரின் புகழும், உள்ளூர் பொருளாதாரமும் வளர்வதாக தெரிவிக்கின்றனர்.
தக்காளி வீசும் இந்த உணவுப் போர், மக்களை ஒருவரோடு ஒருவர் விளையாட்டுத்தனமாக இணைத்து, மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியை உருவாக்குகிறது.எந்த மத அல்லது அரசியல் நோக்கமும் இல்லாமல், இந்தத் திருவிழா வெறுமனே மகிழ்ச்சியான கொண்டாட்டமாகவும், உலகளாவிய கலாச்சார நிகழ்வாகவும் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.