
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சூரியன்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் ஏலக்காய், கிராம்பு உட்பட நறுமணப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.
இந்த எஸ்டேட்டை தேவதானத்தைச் சேர்ந்த கடற்கரை என்பவர் குத்தகைக்கு எடுத்துப் பராமரித்து வந்துள்ளார். இவரது மகன்களான சண்முககுமார், செல்வகுமார் மற்றும் சிவகிரியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், மாரியப்பன், ராஜபாளையம் திருவள்ளுவர் தெரு வேங்கை ஆகியோரும் தோட்ட வேலை பார்த்துள்ளனர்.
மேலும் எஸ்டேட் தோட்டத்தின் காவலாளியாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஊமைத்துரை என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர்கள் 7 பேரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வனவர் கனகராஜ் தலைமையில் வனக் குழுவினர் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்று பார்த்த போது அங்குக் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதுடன் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டதும் உறுதி செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த 5 லிட்டர் சாராய ஊறல், 2 நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்து 6 பேரைக் கைது செய்தனர். பறிமுதல் செய்த நாட்டுத் துப்பாக்கியை சேத்தூர் காவல் நிலையத்திலும், பறிமுதல் செய்த கள்ளச்சாராயத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீசாரிடமும் ஒப்படைத்துள்ளனர். தப்பி ஓடிய வேங்கை என்பவரை வனத்துறையுடன் இணைந்து போலீசார் தேடி வருகின்றனர்.