
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.
அதில், இரண்டாம் நாளான நேற்று “100 ஆண்டுகளின் சங்கப் பயணம்: புதிய எல்லைகள்” என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“உள்நாட்டில் தயாரிக்கப்படும் எதையும் வெளியிலிருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை. உள்நாட்டில் தயாரிக்கப்படாததுடன், வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை மட்டும் நாம் இறக்குமதி செய்யலாம்.
நாட்டின் கொள்கை தானாகவே வகுக்கப்பட வேண்டும்; ஒருவரின் அழுத்தத்தின் கீழ் செல்லக் கூடாது. சுதேசி என்பது, நாட்டில் ஏற்கனவே உள்ள அல்லது எளிதில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் இருப்பதைக் குறிக்கிறது.
ஆத்மநிர்பர் அல்லது சுதேசி முக்கியம். சர்வதேச வர்த்தகம் தானாகவே நடைபெற வேண்டும்; ஆனால் அழுத்தத்தின் கீழ் நிகழக்கூடாது. சுயசார்புதான் அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய தீர்வாகும்.
எனவே, உள்நாட்டு (சுதேசி) தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம்.
இந்திய மதிப்புகளை ஏற்றுக்கொள்வது, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது, சுற்றுச்சூழல் உணர்வை ஊக்குவிப்பது உள்ளிட்டவை — சமூக மாற்றத்திற்கான திட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும்,” என அவர் உரையாற்றினார்.