• August 28, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2005-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டியின் காரணமாக, சிவசேனாவில் இருந்து விலகிய பால்தாக்கரே அவர்களின் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே, அதன் பிறகு சொந்த கட்சி தொடங்கி தனக்கான தனிப்பாதையில் சென்றார்.

உத்தவ் தாக்கரேயுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் சிவசேனா உடைந்த பிறகு நிலைமை மாற ஆரம்பித்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு தொடர்ந்து சறுக்கல்கள் ஏற்பட்டன.

தலைவர்கள் அனைவரும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு சென்றுவிட்டனர். மற்றொரு புறம், ராஜ் தாக்கரே தலைமையிலான கட்சியும் தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மோசமான தோல்விகளை சந்தித்தது.

இந்த தோல்வி, உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்களை ஒன்றுசேர வைக்கும் காரணமாக அமைந்தது.

ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா அரசு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளிகளில் இந்தியை திணித்தபோது, அதற்கு எதிராக ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் குரல் எழுப்பினர்.

இந்தி திணிப்பின் போது, உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே குறிப்பிட்டு இருந்தார். உத்தவ் தாக்கரேயும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா

கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தவ் தாக்கரேயின் பிறந்த நாள் வந்தது. இதில், உத்தவ் தாக்கரேயுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, அவரது இல்லத்திற்கு ராஜ் தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். இது, அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை வெகுவாக குறைத்தது.

தற்போது மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கி இருக்கிறது. இதையடுத்து, ராஜ் தாக்கரே தனது இல்லத்திற்கு விநாயகர் சிலையை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளார்.

எனவே, உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன், முதல் முறையாக மும்பை தாதாரில் இருக்கும் ராஜ் தாக்கரேயின் இல்லத்திற்கு சென்று விநாயகரை தரிசனம் செய்தார்.

ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ் தாக்கரே

தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்

தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்திருப்பதை குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “தாக்கரே பிராண்ட் இனி மக்களிடம் எடுபடாது” என்று குறிப்பிட்டார்.

மும்பையில் பா.ஜ.க-விற்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமீத் சாத்தம், இது குறித்து கூறுகையில்:
“ஒன்றுசேருகிறார்கள் என்பது முக்கியம் இல்லை. யார் தங்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதைத்தான் மக்கள் பார்க்கின்றனர். மும்பையின் வளர்ச்சி மிகவும் முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.

மும்பை மாநகராட்சி தேர்தலில், தாக்கரே சகோதரர்களின் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.

மும்பை உள்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *