
`டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டை, டோலிவுட்டை, பாலிவுட்டை, மாலிவுட்டை என அனைத்துச் சினிமாக்களையும் தன்னுடைய பெயரை உச்சரிக்கச் செய்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.
சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அத்திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அப்படத்தை இயக்கியதோடு சிறியதொரு கதாபாத்திரத்தில் தோன்றி ஆழமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் அபிஷன் ஜீவிந்த்.
அப்படியான நடிப்பைக் கொடுத்த அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்கள் பலரின் ஆசையாக இருந்தது.
இப்போது கதாநாயகனாகக் களம் காண விருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் உதவி இயக்குநரான மதன் இப்படத்தை இயக்குகிறார்.
மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ இப்படத்தைத் தயாரிக்கிறது.
அத்தோடு செளந்தர்யா ரஜினிகாந்தின் ‘ஜியான் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும் இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசை அமைக்கவிருக்கிறார்.
தனது நண்பன் மதன் இயக்கத்தில் நடிப்பது குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், “நண்பர்களுடன் ஒன்றாக வளர்ந்து செல்வது போல் வேறு எதுவும் சிறப்பாக இருந்திட முடியாது.
உங்கள் பார்வையில் நடிகராக எனது அறிமுகத்திற்கு மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். என் இயக்குநர் மதன் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஆனால் அதைப் பெரிய மேடைக்காக வைத்திருக்கிறேன்.” எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள..
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…