
‘காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாகிறார் KPY பாலா. நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல் எனப் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
‘ரணம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஷெரிஃப் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் பாலா பேசுகையில், “படத்தின் கதையைக் கேட்க பல கதாநாயகிகளும் வருவாங்க. கதையைக் கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சுப் போய் ‘கதை சூப்பராக இருக்கு’னு சொல்வாங்க.
`50 பேர் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க’
கதைக் கேட்க ஹீரோயின்ஸ் வரும்போது நான் ஹால்ல காத்திருப்பேன். கதைக் கேட்டு முடிச்சதும் நான்தான் ஹீரோனு தெரிஞ்சதும் ‘யோசிச்சிட்டு அப்புறம் சொல்றேன்’னு போயிடுவாங்க.
அப்படி 50 பேர் நான் ஹீரோனு தெரிஞ்சதும் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க. அவங்க மேல தப்பு சொல்லல. நம்மளும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.
51-வது நபராக வந்து கதைக் கேட்டு, நான் ஹீரோனு தெரிஞ்சப் பிறகும் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு நமிதா கிருஷ்ணமூர்த்தி ஒத்துக்கிட்டாங்க.
தோற்றம் சார்ந்து சில ‘இன்ஃபீரியர் காம்ப்ளக்ஸ்’ இருக்கிற நபருக்கு இது பெரிய விஷயம். இப்படியான விஷயங்களைச் செய்யுறதெல்லாம் ரொம்ப அரிது. எனக்காக நீங்க அதைச் செய்ததற்கு நன்றி. நான் கேமராவுல நல்ல தெரியுவேனான்னு ஒளிப்பதிவாளர்கிட்ட கேட்டுட்டே இருப்பேன்.
இப்போ டிரைலர் பார்த்ததும் நம்மளும் பரவாயில்ல, நல்ல இருக்கோம்னு ஃபீல் பண்ண வச்சவர் ஒளிப்பதிவாளர்தான். இதுக்கு முன்னாடி நான் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கேன்.
“காந்தி கண்ணாடி பாலாவாக காரணம்”
இன்னைக்கு இந்த நிகழ்வுக்கு வந்ததும் நம்ம படம்தான் வெளியாகுதானு அடிவயிற்றில் அயர்ன் பாக்ஸ் வச்சு தேய்க்கிற மாதிரியான உணர்வைக் கொடுத்தது.
வேடிக்கை பார்த்தவனுக்கு உலகக் கோப்பைக் கொடுத்த மாதிரிதான் எனக்கு இந்த திரைப்படம். காரைக்கால் பாலாவாக இருந்த நான் இன்னைக்கு ‘காந்தி கண்ணாடி’ பாலாவாக உங்க முன்னாடி நிற்பதற்கு காரணம் அமுதவாணன் அண்ணன்தான். 12 வருஷமாக நான் அவர்கூடதான் இருக்கேன்.
அவர் இல்லைனா நான் இன்னைக்கு இங்க இல்ல. எல்லோருக்கும் வர்ற மாதிரி நிறைய நிராகரிப்புகளும் எனக்கு நடந்திருக்கு. நான் 18 படங்கள்கிட்ட இதுக்கு முன்னாடி செய்திருக்கேன். ஆனால், அதுல 11 படங்கள்ல என்னுடைய காட்சி இருக்காது.

எடிட்டிங்கில் அதைக் கட் பண்ணியிருப்பாங்க. அதற்காக அவர்களை நான் தவறாகச் சொல்லல. இந்தப் படத்தோட இயக்குநர் ஷெரிஃப் எனக்கு முன்னாடியே தெரியும். என்னுடைய ஆசையையும் அவர்கிட்ட சொல்லியிருந்தேன்.
பிறகு, லாரன்ஸ் மாஸ்டரும் என்னுடைய ஆசையைப் பற்றி கேட்டார். நானும் ஹீரோவாகணும்னு அவர்கிட்ட சொன்னேன். ‘நான் ஹீரோவாகும் போது நீ ஹீரோவாக மாட்டியா, ஆகிடுவ’னு சொன்னாரு.
அத்தோட ‘உன்னுடைய தோற்றத்தைத் தாண்டி, நீ நல்லாயிருந்தா ஒரு 40 குடும்பம் நல்லா இருக்கும்’னு அவர் சொன்னார். அப்புறம்தான் இயக்குநர் ஷெரிஃப் என்னை வைத்து படம் பண்றதுக்கு ஒரு தயாரிப்பாளர் தயாராக இருக்கார்னு சொன்னாரு.
இத்தனை நிராகரிப்புகளைப் பார்த்தவனுக்கு வாய்ப்புக் கொடுத்த முதல் தயாரிப்பாளர் இப்படத்தின் தயாரிப்பாளர்தான்” எனக் கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…