• August 27, 2025
  • NewsEditor
  • 0

பப்புவா நியூ கினியா நாட்டின் சார்பாக முதல் முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது ‘Papa Buka’ திரைப்படம்.

இப்படத்தை ‘Trees Under the Sun’ எனும் படத்தை இயக்கி சர்வதேச அளவில் விருதுகளை வென்று கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் பிஜு குமார் தாமோதரன் இயக்கியிருக்கிறார். பப்புவா நியூ கினியா நாட்டின் திரைப்படமான இதை அக்‌ஷய் குமார் பரிஜா, பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர். கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ் இசையமைத்திருக்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வரலாற்று ஆய்வாளர்கள், இரண்டாம் உலகப்போரில் போரில் ஈடுபட்ட முதியவரின் உதவியுடன் பப்புவா நியூ கினியா நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இடையே இருக்கும் வரலாற்று தொடர்பையும், அந்நாட்டில் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர் பாதிப்பையும் மனிதத்தோடு எடுத்துக் காட்டுவதுதான் இதன் கதைக்களம்.

தற்போது பப்புவா நியூ கினியா நாட்டின் சார்பாக முதல் முறையாக இந்த ஆண்டின் 98வது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அவ்வகையில் இப்படத்தின் இணை தயாரிப்பாளரான பா.ரஞ்சித், “இது எனக்குப் பெருமையான தருணம். ‘பாப்பா புக்கா‘ திரைப்படம், 98வது அகாடமி விருதுகளில் சர்வதேச சிறந்த திரைப்படப் பிரிவிற்காக பப்புவா நியூ கினியின் அதிகாரப்பூர்வ படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இணை தயாரிப்பாளர்களில் ஒருவராக, நானும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக இந்த பப்புவா நியூ கினி – இந்தியா இணை தயாரிப்பில் பங்கெடுத்திருப்பது எனக்கு பெரும் பெருமை.

இந்தக் கதையை உலக மேடைக்கு கொண்டு செல்லும் படைப்பாளர்களுடன் நிற்கும் வாய்ப்பு கிடைத்ததில், நான் மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன். ‘பாப்பா புக்கா’ பட குழுவின் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். அவர்கள் இன்னும் பல விருதுகளை வென்று, இரு நாடுகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *