• August 27, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை திருமதி விஜயலட்சுமிக்கு தேசிய நல்லாசிரியை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 45 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவரிடம் பேசினோம்.

“எனது கல்விப் பணியில் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். 1998 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியையாக முதன் முதலில் பணியில் சேர்ந்தேன். பின்னர், 2010 ஆம் ஆண்டில் பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன்.

எனது பணியை நான் எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன், விருப்பத்துடன் செய்து வருகிறேன். கற்பித்தல் பணியாகட்டும், மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் பணியாகட்டும், எதையும் முழு அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செய்கிறேன்.

தனிப்பட்ட விருதல்ல

அதற்காக கிடைத்த அங்கீகாரமே எனக்கான விருதுகள் என கருதுகிறேன். மாநில அரசு எனக்கு 2020 ஆம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதை வழங்கியது. அந்த விருது எனது பணிக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருந்ததோடு, மேலும் வளர்ச்சிக்கான உறுதுணையாகவும் அமைந்தது.

இப்போது, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருது எனக்கான தனிப்பட்ட விருதல்ல; இது என் பள்ளிக்கும், என் பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும், என் குடும்பத்தாருக்கும் உரியது. குறிப்பாக, என் குழந்தைகள், என் மகள்கள், என் கணவர், என் தாய்–தந்தை, சகோதரர்–சகோதரிகள் ஆகியோருக்குமான விருதாகவே கருதுகிறேன்.

மேலும், இந்த விருது என் மாநிலத்திற்கான அங்கீகாரமாகவும் பார்க்கிறேன். எனவே, இந்த விருதை அனைவருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன். எனது கல்விப் பணிகள் இன்னும் தொடரும்” என்று கூறினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வாழ்த்து..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி விஜயலட்சுமி அவர்களுக்கு, இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

காளிமுத்து

திருமதி விஜயலட்சுமி அவர்கள் இந்த விருதுக்கு முழுமையாகத் தகுதியானவர். கல்வி சார்ந்த செயல்பாடுகளிலும், மாணவர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு வருபவர்.

அவர்கள் தேசிய நல்லாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது திருப்பூர் மாவட்டத்திற்கே அல்லாது, முழு தமிழ்நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்துகிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக திருமதி விஜயலட்சுமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்று வாழ்த்தினார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *