
கொச்சி: கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.