
இந்தியாவின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலாவின் பெயரால் பல்வேறு விதிமீறல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சிறு, குறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்களை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி, பயிர்களை அழித்து ஆடம்பர தங்கும் விடுதிகளை கட்டி வருகின்றனர்.
இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் தங்கும் விடுதிகளை கட்டுகிறோம் என்கிற பெயரில் மலை உச்சிகளிலும் , சரிவுகளிலும் அத்துமீறி ஆபத்தான கட்டுமானங்களை பெரிய அளவில் எழுப்பி வருகின்றனர். இதுபோன்ற விதிமீறல் கட்டுமானங்கள் நீலகிரி முழுவதும் பரவலாக நடைபெற்று வந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்று அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தலக்காடு மட்டம் பகுதியில் ஆபத்தான சரிவில் கட்டப்பட்டிருக்கும் வுட் ஹவுஸ் கட்டுமானங்களை ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
பின்னணி குறித்து தெரிவித்த வருவாய்த்துறையினர், ” எங்களுக்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். சரிவான பகுதியில் அத்துமீறி வுட் ஹவுஸ் கட்டப்பட்டு வருவதைக் கண்டறிந்தோம்.

மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற கட்டுமானங்களை கண்காணிக்கும் குழுவின் தலைவரான மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் விசாரணை நடத்துப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த தானுமேத்தா, சுனில் உள்ளிட்ட எட்டு நபர்களின் வுட் ஹவுஸ் கட்டுமானங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது ” என்றார்.