
ஆக்ரோஷமானது; குரூரமானது என்று பெயர் வாங்கிய கழுதைப்புலியின் பிரசவம்தான், பாலூட்டிகளிலேயே மிகவும் வலி மிகுந்தது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
சிலர், ஒரு பெண் கழுதைப்புலியின் பிரசவம் என்பது வாழ்வா, சாவா போராட்டம். தலைப்பிரசவம் மறுஜென்மம் என்பது கழுதைப்புலிகளுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் என்கிறார்கள். இதற்கானக் காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், பெண் கழுதைப்புலிகளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில், உடலில் புள்ளியிட்ட, கோடுகள் இருக்கிற, பழுப்பு நிற மற்றும் ஆர்ட்வோல்வ்ஸ் என நான்கு வகையான கழுதைப்புலிகள் வாழ்கின்றன. இதில், புள்ளியிட்ட இனத்தைச் சேர்ந்த பெண் கழுதைப்புலிகளின் பிரசவம்தான் அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் புருவம் உயர்த்த வைக்கிறது.
இந்த வகை பெண் கழுதைப்புலிகள், ஆணைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும். சிறு சிறு குழுக்களாக வாழும். பெண்ணே குழுவின் தலைவி. ‘த லயன் கிங்’ படத்தில்கூட இதைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். பிரசவங்களில் தப்பிப் பிழைத்தால், இருபது முதல் இருப்பத்தைந்து வயது வரை வாழும் பெண் கழுதைப்புலிகள். தனக்கு சொந்தமான குழுவில் இருக்கிற ஆணுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடாது. அதே நேரம், ஆணுக்கு இனச்சேர்க்கை என்பது அத்தனை சுலபம் கிடையாது. அதற்குக் காரணம், பெண் கழுதைப்புலிகள் ஆணைவிட ஆக்ரோஷமானவை். சிங்கமே ஆனாலும் சிங்கிளாக மாட்டிக்கொண்டால், அதன் தலை முதல் வால் வரை தின்று செரித்துவிடும் இவை. சிங்கக்குட்டிகளின் பிரதான எதிரியே கழுதைப்புலிகள்தான்.

சரி, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்துகிற புள்ளியிட்ட பெண் கழுதைப்புலிகள் ஏன் இந்தளவுக்கு ஆக்ரோஷமாக, ஆதிக்க மனப்பான்மையுடன் இருக்கின்றன தெரியுமா..?
வலிமையான தசைகளுக்கும், உறுதியான எலும்புகளுக்கும் காரணமான டெஸ்ட்டோஸ்டீரான் என்கிற ஹார்மோன், ஆண் கழுதைப்புலிகளைவிட பெண் கழுதைப்புலிகளுக்கு மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிற இந்த ஹார்மோன், பெண் கழுதைப்புலிகளுக்கு ஆணைவிட அதிகமாக இருப்பதால் உண்டான விளைவு என்னத் தெரியுமா? பெண்ணின் அடிவயிற்றுப்பகுதியில், ஆணுறுப்பு வளர்ந்திருக்கும். இதை முதல்முறையாக தெரிந்துகொள்பவர்கள் ஆச்சரியப்பட வேண்டாம். அதுவொரு போலி ஆணுறுப்பு (pseudo-penis).

மனிதர்களில், உச்சக்கட்டம் அடைவதில் ஆணுறுப்புக்கு சமமானது பெண்ணுறுப்பில் இருக்கிற க்ளைட்டோரியஸ் என்கிறது மருத்துவ உலகம். கழுதைப்புலிகளில், பெண்ணின் உடலில் ஆணுக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதால், பெண் கழுதைப்புலிகளின் க்ளைட்டோரியஸ் ஆனது ஆணுறுப்பைப்போல நீண்டு வளர்ந்திருக்கிறது. இதைத் தவிர, தனியாக பெண்ணுறுப்பு கிடையாது, பெண் கழுதைப்புலிகளுக்கு… இந்த உறுப்பின் வழியேதான் சிறுநீர்க் கழிக்கும்; உறவும் கொள்ளும். இந்த போலி ஆணுறுப்பு ஏழு இன்ச் நீளம்கூட இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நீளம்தான் இனப்பெருக்க காலத்தில் ஆணை ஈர்க்கும். ஆனால், பெண்ணின் ஆக்ரோஷத்தை வென்று அதனால் இணை சேர முடியாது. ஆண் பணிந்துபோனால் மட்டுமே உறவுக்கு வாய்ப்பு.
எது வரமோ அதுவே சாபமும் ஆகலாம் என்பார்கள். அந்த பொன்மொழி பெண் கழுதைப்புலிகளுக்கு மெத்த பொருந்தும். அது கருத்தரித்தப் பிறகு 110 முதல் 120 நாள்கள் வரை கருவை சுமக்கும். அதன் பிறகு, தன்னுடைய போலி ஆணுறுப்பின் வழியே பிரசவிக்கும். அதன் விட்டம் ஒரு இன்ச் டயாமீட்டரை விடவும் குறுகலானது. கர்ப்பமாக இருக்கையில் ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதால், அதன் போலி ஆணுறுப்பின் தசைகள் கடினமாக, உறுதியாக இருக்கும். அதன் வழியே தன் குட்டியைப் பிரசவிக்கையில், பெண் கழுதைப்புலியின் க்ளைட்டோரியஸ் கிழிந்து குருதிக்கொட்டும். இதன் காரணமாக தலைப்பிரசவத்தில் 20 சதவிகிதம் வரை பெண் கழுதைப்புலிகள் இறந்துவிடும்.

தாயின் நிலைமை இப்படியென்றால், முதல் குட்டியின் நிலைமை இன்னும் பரிதாபம். ஒரு பிரசவத்தில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். அதில், முதல் குட்டி தாயின் குறுகலான மற்றும் நீண்ட பிறப்புறுப்பின் வழியே வெளிவர இயலாமல் மூச்சுத்திணறி இறந்துவிட 60 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தப்பிப் பிழைக்கிற குட்டிகளை கிழிந்த பெண்ணுறுப்பு, ரத்தப்போக்கு, தொற்று இவற்றுடன் போராடியபடிதான் தாய் கழுதைப்புலி வளர்க்க ஆரம்பிக்கும். தாய் கழுதைப்புலிகளின் இந்தப் போராட்டம் அறிந்தோ என்னவோ, குட்டி கழுதைப்புலிகள் கண்களைத்திறந்தபடியே பிறக்கும். பிறக்கையிலே ஆக்ரோஷமாக இருக்கும். அந்த ஆக்ரோஷத்துக்குக் காரணம், தாய் கழுதைப்புலியின் உடலில் இருந்து குட்டிகளுக்கு கடத்தப்படுகிற ஆண்ட்ரோஜன் ஹார்மோன்தான்.
கழுதைப்புலிகளின் ஆக்ரோஷமே அவற்றின் சர்வைவலுக்கு காரணம்; அதுவே பெண் கழுதைப்புலிகளுக்கு வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கும் துணிவையும் வழங்குகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…