
நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி கனவு தற்போது சாத்தியப்பட்டிருக்கிறது. ஊட்டியில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்து கட்டப்பட்டிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது . பேருந்துக்காக மழையிலும் குளிரிலும் நோயாளிகள் வெட்டவெளியில் காத்துக்கிடக்க வேண்டிய துயரம் தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நிழற்குடை கட்டித் தரப்படும் என நீலகிரி எம்.பி. ஆ.ராசா தரப்பில் அறிவிப்பு வெளியானது . மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள பட்ஃபயர் பகுதியில் ஊட்டி- கூடலூர் சாலையின் இரு மருங்கிலும் இரண்டு யணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டன. தலா 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் பயணியர் நிழற்குடைகளை நீலகிரி எம்.பி. ஆ. ராசா ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் முதல் அரசு கொறடா வரை பலரும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
தகரம் மாதிரியான பொருளைக் கொண்டு மூன்று பக்க சுற்றுச்சவர் மற்றும் ஒற்றை கூரை அமைக்க தலா 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 12 லட்சம் ரூபாய் செலவானதா என மக்கள் பலரும் கேள்வி எழுப்புவதுடன், கட்டுமான செலவை விட திறப்பு விழா உள்ளிட்ட விளம்பர செலவு அதிகம் போல என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து பதில் அளித்த பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் ரமேஷ் , ” 2023 – 2024 – ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் பகுதியில் 5.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதைவிட கூடுதல் வசதிகளுடன் தற்போதைய 2025- 2026 – ம் ஆண்டு 6 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நல்ல தரத்தில் தான் கட்டப்பட்டுள்ளது” என்றார்.