
பசி போக்கும் `ஈரோடு சிறகுகள்’
எத்தனை பொருளை வைத்திருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் மனிதன் உணவைத் தான் தேடுகிறான். அரையடி வயிறு இதை நிரப்பிட எத்தனை போராட்டங்கள்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என அன்று பாரதி முழங்கியதை தங்களின் உறுதி மொழியாக எடுத்து, ஈரோட்டு மக்களின் ஒருவேளை பசியை தீர்ப்பவர்கள் தான் ஈரோடு சிறகுகள் இயக்கம்.
2013ஆம் ஆண்டு மரக்கன்றுகள் நடுவதையும், இயற்கை சூழலை பாதுகாப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது ஈரோடு சிறகுகள் இயக்கம்.
இந்த அமைப்பு கே.விமல் கருப்பண்ணன் முயற்சியாலும், சி.எஸ். சிவக்குமார் ஆர்வத்தாலும் உருவாக்கப்பட்டு இன்று ஈரோடு முழுவதும் எண்ணற்ற தன்னார்வலர்களால் `பசி போக்கும் இயக்கமாக’ சிறப்பாக செயல்படுகிறது.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் மாலை நேரத்தில் மக்களின் பசியை ஆற்றும் இந்த செயல்பாடு எப்படி தோன்றியது என்பதை பற்றி செயலாளர் சி.எஸ் சிவக்குமாரிடம் கேட்டபோது,
”எதேர்ச்சையாக தொடங்கிய திட்டம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட பிறந்த நாள் அன்னைக்கு ஒரு வேளை சாப்பாடு போடலாம்னு நெனச்சு பண்ணுனோம்.
அன்னைக்கு தான் தெரிஞ்சுது நான் வாழுற இதே ஊர்ல எவ்வளவு பேர் சாப்பாட்டுக்காக கஷ்டப்படுறாங்கன்னு. அந்த நாள் தான் முடிவெடுத்தோம் இந்த நல்ல காரியம் நிக்கவே கூடாது வருஷம் முழுக்க நடக்கணும்னு.
அந்த நாளுல இருந்து தொடர்ந்து இரண்டு வருஷமா இந்த மாலை வேளை உணவு ஒரு நாள் கூட தவறாம கொடுத்துட்டு இருக்கோம் என சி.எஸ்.சிவக்குமார் கூறினார்.
மாலை உணவு திட்டம்
பிறகு இந்த உணவு தரும் நிகழ்வைப் பற்றி தலைவர் விமல் கருப்பண்ணன் கூறத் தொடங்கினார்.
”வருஷம் 40 லட்சம் வரை செலவாகுது. இந்தத் திட்டம் இங்க இருக்க அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பாத்துக்குற அட்டெண்டர்களுக்கு தான் பெரும்பாலும் பயன் தருது. நோயாளிகள் யாருக்கும் இந்த உணவு தருவது கிடையாது காரணம் அவங்களுக்கு தேவையான உணவு உள்ள மருத்துவமனையிலேயே கிடைச்சுருது.
இந்த அரசு மருத்துவமனையில வந்து மருத்துவம் பார்த்துக்கிறவங்க எதுவுமே இல்லாத நிலையிலதான் வர்ராங்க. அவங்களுக்கு கடையில காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவதுங்கிறது சிரமமான ஒண்ணா இருக்கும்.
எதுவுமே இல்லாம தான் இங்க வர்ராங்க இங்க வந்தும் அவர்களுக்கு சாப்பாடு இல்லாட்டி எங்க போவாங்க? என எங்களைக் கேள்விக்கு உள்ளாழ்த்தினார்.

வருஷத்துக்கு இதுக்கு மட்டுமே 40 லட்சத்துக்கு மேல செலவாகுது. நாங்க சமைக்கிற சாப்பாடு மட்டும் இல்லாம இங்க இருந்து 20 கிலோமீட்டர்ல இருக்கிற மண்டபங்களில தேவைக்கு அதிகமா மீதமாகுற உணவுகளை வாங்கி அது தரமான உணவா இருக்கானு நாங்க சாப்பிட்டு பார்த்ததுக்கு அப்புறம் தான் இங்க இருக்க எல்லாருக்கும் கொடுப்போம் .
இந்த மாலை உணவு திட்டம் தவிர கல்விக்கு உதவுறது, இல்லாத பட்டவங்க வீட்டுல நடக்கிற நல்ல, கெட்ட காரியங்களுக்கு டேபிள் சேர் தர்றது, அது மட்டுமில்லாம ஒரு அரசு மருத்துவமனையில இருந்து இன்னொரு அரசு மருத்துவமனைக்கு ஐ.சி.யூ செட்டப் கொண்ட ஆம்புலன்ஸ் வசதி இலவசமா தர்றதுன்னு நிறைய செய்துகிட்டு இருக்கோம்” என விமல் கருப்பண்ணன் நெகிழ்வுடன் கூறினார்.
`15 இட்லி தருவீங்களா?’
`மாலை உணவு’ பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற சிந்தனைக்கு காரணம் குறித்து கேட்டதற்கு, சி.எஸ் சிவக்குமார் தனது மனம் கலங்கிய நிகழ்வு ஒன்றை பகிரத் தொடங்கினார்.
ஒரு நாள் இங்க சாப்பாடு வாங்க வந்த ஒரு வயசான அம்மா தனக்கு 15 இட்லி வேணும்னு சொன்னாங்க. ஒருத்தங்களுக்கே அத்தனை இட்லி தர முடியாதுன்னு மறுத்தோம்.
அதுக்கு அவங்க. “ஐயா நீங்க கொடுக்கிற இந்த ஒருவேளை இட்லி தான் நான் இன்னைக்கு ராத்திரி நாளைக்கு காலை, மதியம்னு மூணு வேலையும் சாப்பிடனும் கொஞ்சம் சேர்த்து கொடுங்க. நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் நான் தினமும் சாப்பிடுறேன்” ன்னு சொன்னாங்க.
அவங்க அப்படி சொன்னப்போ தான் தெரிஞ்சுது நாங்க போடுற ஒருவேளை சாப்பாடு எத்தனையோ பேரோட ஒரு நாள் உணவாய் இருக்குதுன்னு.
அப்போதான் முடிவு பண்ணுணோம் என்ன ஆனாலும் இந்த திட்டத்தை மட்டும் நம்ம ஈரோடு சிறகுகள் இயக்கம் கைவிடவே கூடாது” என நெஞ்சத்தில் ஏற்பட்ட தாக்கத்தையும், ஒரு ஏழைத் தாயின் வலியையும் நம்மிடம் பகிர்ந்தார் சி.எஸ்.சிவக்குமார்.

`இந்த ஒரு வேளை சோறு’
இந்த திட்டத்தால் பயனடையும் குமாரபாளையத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரிடம் கேட்டபோது, ”மகனை கேன்சரில் இருந்து காப்பாத்த போராடுறேன். என்னோட மகன் இந்த ஈரோடு அரசு மருத்துவமனையில் தான் கேன்சர் நோயாளியா படுத்துட்டு இருக்கான்.
பெத்த புள்ளை நம்மள பாத்துக்க வேண்டிய காலத்துல நான் என் புள்ளைய பாத்துக்குற நிலைமையில இருக்கேன்” என தனது நிலையை வருத்தத்துடன் கூறிய மகாலட்சுமியிடம் இந்த மாலை நேர உணவு உங்களுக்கு பயனளிக்கிறதா? என கேட்டேன்.
அதற்கு அவர் இந்த சாப்பாடு மட்டும்தான் நான் வயிறார சாப்பிடுறேன் மத்த வேளை எல்லாம் காசு செலவாயிடும்னு கொஞ்சமாவும் சில நேரங்கள்ல பட்டினியாவும் இருக்கேன்.
இந்த ஒரு வேளை சோறு இங்க இருக்கிற எத்தனையோ பேரோட வயிறு நிறைய வைக்கிறது” என்றார்.
இத்தனை மக்கள் ஒருவேளை சோற்றுக்கு வரிசையில் நிற்கும் இதே நாட்டில் தான், ஒரு வருடத்தில் ஐம்பத்தி ஐந்து கிலோ வரை உணவை தனி ஒரு மனிதன் வீணடிக்கிறான்.
அதாவது ஒரு ஆண்டிற்கு 68 முதல் 78 டன்கள் வரையிலான உணவு வீணடிக்கப்படுகிறது என புள்ளி விவரங்கள் நமக்குச் சொல்கிறது.
ருசிக்காக உணவை மறுக்கும் இந்த உலகில் பசிக்காக வாடும் பாவப்பட்ட மனிதர்களை நம்மில் இங்கு எத்தனை பேருக்கு தெரியும்.
“பசித்தோர் முகம் பார், பரம்பொருள் அருள் கிட்டும்” என்கிறார்கள் அருளாளர்கள்.