
சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமான மேட்டூர், எண்ணூர், துாத்துக்குடி உள்ளிட்ட 5 அனல்மின் நிலையங்களில் வெளியாகும் உலர் சாம்பலில், 20 சதவீதம் சிறுமற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள உலர் சாம்பல் மற்ற நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
இந்த நடைமுறையை பின்பற்றாமல் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் உலர் சாம்பல் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படாமல் நேரடியாக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மொத்தமாக சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. பின்னர் அந்த நிறுவனம் உலர் சாம்பலை வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறது.