
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் நியமிக்கப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவருடன் நெருங்கிய நட்பு கொண்ட நடிகை அர்பிதா முகர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும் தொடக்க கல்வி வாரிய முன்னாள் தலைவருமான மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்டோரை அமலாக்கத்துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் பர்வான் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ண சாகா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. முன்னதாக சோதனைக்காக அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்த சாகா, முதல் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.