
கிரிக்கெட் உலகில் ஆக்ரோஷ அணுகுமுறைக்கு சொந்தக்காரர்களான ஆஸ்திரேலிய வீரர்கள், கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் ஒருவர் இல்லாததைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்றால், அத்தகைய சிறப்புக்கு சொந்தக்காரர் இந்தியாவின் `மாடர்ன் டே டிராவிட்’ எனும் புஜாரா தான்.
103 டெஸ்ட் போட்டிகளில் 19 சதம், 55 அரைசதம் என 7,195 ரன்களுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இடப்பெறுவதற்கான தனது காத்திருப்புக்குத் தானே முற்றுப்புள்ளி வைத்து நேற்று (ஆகஸ்ட் 24) ஓய்வை அறிவித்தார் புஜாரா.
இந்த நிலையில், புஜாராவின் டாப் 3 சாதனைகளைப் பார்ப்போம்.
டிராவிட் சாதனையை முறியடித்த ஒரே இந்திய வீரர்!
2017-ல் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 672 நிமிடங்கள் களத்தில் நின்ற புஜாரா, 38.47 ஸ்ட்ரைக் ரேட்டில் 525 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் அடித்து, ஒரு டெஸ்ட் இன்னிங்கிஸில் 500-க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அதற்கு முன்புவரை அதிகபட்சமாக டிராவிட் ஒரே இன்னிங்ஸில் 495 பந்துகளை எதிர்கொண்டதே ஒரு இந்திய வீரரின் சாதனையாக இருந்தது.
5 நாளும் பேட்டிங் செய்வேன்!
ஒரு டெஸ்ட் போட்டி அதிகபட்சமாக 5 நாள்கள் நடைபெறும். அந்த 5 நாள்களிலும் ஒரு வீரர் பேட்டிங் செய்வதென்பது அரிது.
அத்தகைய அரிய சாதனையை புஜாரா உட்பட 13 பேர் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதிலும் புஜாரா மட்டும் ஸ்பெஷல்.
2017-ல் கொல்கத்தாவில் இலங்கைக்கெதிரான டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக இரண்டு இன்னிங்க்ஸும் சேர்த்து புஜாராவுக்கு 5 நாள்களிலும் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அந்த இரண்டு இன்னிங்ஸிலும் 52 மற்றும் 22 ரன்கள் மட்டுமே அடித்தார்.
இதன் மூலம், 5 நாள்கள் பேட்டிங் ஆடியும் 75 ரன்களுக்குக் குறைவாக அடித்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்தார் புஜாரா.

இரட்டைச் சத நாயகன்!
முதல் தர கிரிக்கெட்டில் புஜாரா மொத்தமாக 18 இரட்டைச் சதங்கள் அடித்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் இத்தனை இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் இவர் மட்டுமே.
இந்த லிஸ்டில் உலக அளவில் டான் பிராட்மேன் (37), வாலி ஹாமண்ட் (36), பாட்ஸி ஹென்ட்ரன் (22) ஆகியோருக்கு அடுத்தபடியாக புஜாரா நான்காவதாக இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…