• August 26, 2025
  • NewsEditor
  • 0

மும்பை கொங்கன் பகுதி

மகாராஷ்டிராவில் வரும் புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குகிறது. இவ்விழாவிற்காக மும்பையில் இருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி, மும்பை

கொங்கன் பகுதியை சேர்ந்த பல லட்சம் மக்கள் மும்பையில் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக மாநில அரசு பேருந்து மற்றும் ரயில்வே நிர்வாகம் சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்களை இயக்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு அரசியல் கட்சிகள் இலவச பஸ்களை இயக்குவது வழக்கம்.

மும்பை மாநகராட்சி தேர்தல்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் ரயில்களை அரசியல் கட்சிகள் கொங்கன் பகுதிக்கு இயக்கி வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி, மும்பை

சிவசேனா

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாக இந்த ஆண்டு 2379 இலவச பஸ்களை இயக்க வருகிறது.

இதில் தானேவிலிருந்து 895 பஸ்களும், கல்யாணிலிருந்து 712 பஸ்களும், மும்பையிலிருந்து 703 பஸ்களும் இயக்கப்படுகிறது.

அதில் 95,160 பயணிகள் கொங்கனுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு இலவச சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று சிவசேனா தலைவர் ஒருவர் கூறினார்.

“ஒட்டுமொத்தமாக, நாங்கள் 1,25,000 -க்கும் அதிகமான பக்தர்களை அழைத்து செல்கிறோம். வேறு இது எந்தக் கட்சியையும் விட மிக அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே சிவசேனா

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக 200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க அமைச்சர் ஆசிஷ் ஷெலார் சொந்தமாக 100 பஸ்கள் மற்றும் ஒரு ரயிலை இலவசமாக கொங்கன் பகுதிக்கு இயக்க முடிவு செய்துள்ளார்.

பாஜக

பா.ஜ.க மற்றும் அதன் கட்சி தலைவர்கள் சார்பாக 1000 இலவச பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. பா.ஜ.க 550 இலவச பஸ்களை இயக்கி வருகிறது.

மும்பை பா.ஜ.க துணைத்தலைவர் சுஹாஸ் ஆதிவாரேகர் இது குறித்து கூறுகையில்,”பா.ஜ.க சார்பாக இந்த ஆண்டு 550 பஸ்கள் கொங்கன் பகுதிக்கு இயக்கப்படுகிறது.

ஒவ்வொரு பஸ்சிலும் 42 இருக்கைகள் உள்ளது. இது தவிர பா.ஜ.க தலைவர்கள் ஆசிஷ் ஷெலார், நிலேஷ் ரானே, நிதேஷ் ரானே, மங்கள் பிரபாத் லோதா ஆகியோரும் தலா ஒரு ரயிலை இலவசமாக இயக்க முன்வந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி

மேலும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் கட்சி கவுன்சிலர்கள் சார்பாக 500 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக திட்டமிடப்பட்டு அரசு பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஸ்சில் பயணம் செய்பவர்கள் பட்டியலும் தயாராகிவிட்டது. ஒரு பஸ்சிற்கு ரூ.31 ஆயிரம் வாடகை பேசப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மாநில விழாவாக விநாயகர் சதுர்த்தி

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கொங்கன் பகுதியில் உள்ள ரத்னகிரி, ராய்கட், சிந்துதுர்க் பகுதிகளுக்கு 15 லட்சம் மக்கள் செல்கின்றனர்.

ஏற்கெனவே அதிகமானோர் சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். 3000-க்கும் அதிகமான இலவச பஸ்கள் இயக்கப்பட்டாலும் மும்பையில் இருந்து கோவா செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

இச்சாலை பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது.

இது தவிர பா.ஜ.க கூட்டணி அரசு மும்பையில் மராத்தியர்கள் கணபதி விழாவை கொண்டாடுவதற்காக ரூ.11.50 கோடியை ஒதுக்கி இருக்கிறது.

இதில் 1800 கணபதி மண்டல்களுக்கு தலா ரூ.25000 விழா நிதியாக கொடுக்கப்பட இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது விநாயகர் சதுர்த்தி விழாவை மாநில விழாவாக அறிவித்து மாநில அரசு கடந்த வாரம் அரசாணையும் பிறப்பித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *