• August 26, 2025
  • NewsEditor
  • 0

விளையாட்டு உலகில் எத்தனையோ வீரர், வீராங்கனைகள் தங்களின் வலிமையால், திறமையால் வரலாறு படைக்கிறார்கள்.

ஆனால், அவர்களில் சிலர் தங்கள் உடல்நிலையை வென்று வெற்றியை நோக்கிச் செல்வதால், அவர்களின் கதைகள் மனித மனதை ஆழமாகத் தொடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீராங்கனைதான் பிரான்செஸ்கா ஜோன்ஸ்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான பிரான்செஸ்கா, 2000-ம் ஆண்டில் அரிதான எக்ட்ரோடாக்டிலி எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா (EED) என்ற அரிய மரபணு குறைபாட்டுடன் இவ்வுலகில் பிறந்தார்.

அதனால் இரு கைகளிலும் தலா ஒரு கட்டை விரல் மற்றும் தலா 3 விரல்கள் என 8 கை விரல்களுடனும், ஒரு காலில் 4 மற்றும் இன்னொரு காலில் 3 என மொத்தம் 7 கால் விரல்களுடனும் பிரான்செஸ்கா வளர்ந்தார்.

பிரான்செஸ்கா ஜோன்ஸ்

இதன் காரணமாக, “இனி நீங்கள் விளையாட்டில் ஈடுபட முடியாது” அவரின் சிறுவயதிலேயே மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால், மருத்துவர்களின் அந்த வார்த்தைகளையே தனக்கான சவாலாக எடுத்துக் கொண்டு, டென்னிஸில் தனக்கான பாதையை நோக்கி பயணப்பட்டார் பிரான்செஸ்கா.

தனது 9 வயதில் ஸ்பெயின் நாட்டில் உள்ள சான்சஸ்-கசல் அகாடமிக்கு சென்று பயிற்சி பெற்றார்.

அங்கு தினமும் பல மணி நேரங்கள் உழைத்து, உடல்ரீதியாக வரும் சவால்களுக்கேற்றவாறு தனது பாணியை மாற்றி தீவிரமாக பயிற்சி செய்தார். மன உறுதியையும் உடல் வலிமையையும் ஒரே நேரத்தில் வளர்த்துக் கொண்டார்.

2021-ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக அடியெடுத்து வைத்து அனைவர் மத்தியிலும் கவனம் ஈர்த்தார்.

அங்கிருந்து தனது நிலையான ஆட்டத்தின் மூலம் கான்ட்ரெக்ஸெவில்லே மற்றும் பலெர்மோவில் ஒரு செட் கூட இழக்காமல் அடுத்தடுத்து 125 WTA பட்டங்களை வென்றார் பிரான்செஸ்கா.

மொத்தத்தில் தான் அறிமுகமான நான்கே ஆண்டுகளில் தனது டென்னிஸ் கரியரில் அடுத்தகட்டமாக சிறப்பான நிலையை எட்டினர்.

அதாவது, கடந்த ஜூலை முடிவில் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் முறையாக டாப் 100 இடங்களுக்குள் முன்னேறி 84-வது இடம்பிடித்தார்.

தற்போது 89-வது இடத்தில் இருக்கும் பிரான்செஸ்கா, 2025 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தகுதிச் சுற்றுகளில் மூன்று பேரை நேர் செட்களில் வெற்றிகொண்டு, அடுத்தகட்டமாக பிரதான சுற்றுக்குள் நுழைந்திருக்கிறார்.

பிரான்செஸ்கா ஜோன்ஸ்
பிரான்செஸ்கா ஜோன்ஸ்

சாகும் வரையில் பெரிய கனவுகள் காண்பேன்!

“டென்னிஸ் விளையாடுவது கிட்டதட்ட சாத்தியமற்றது என்று டாக்டர் என்னிடம் கூறியது என் மனதில் மிகப்பெரிய சவாலாகப் பதிந்தது.

என்னுடைய போட்டித் திறனும், என்னை நானே முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற மன உறுதியும்தான், இன்று என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

மக்கள் தொடர்ந்து பெரிய கனவுகளைக் காண வேண்டும். நான் சாகும் வரையிலும் பெரிய கனவுகள் காண்பேன்” என்று கடந்த ஆண்டு பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிரான்செஸ்கா கூறியது, இன்று அவரைப்போன்ற பலரின் மன உறுதிக்கு மேலும் பலம் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

நம்பிக்கையின் வெளிச்சம் பிரான்செஸ்காவுக்கு வெற்றிகள் குவிய வாழ்த்துகள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *